கர்நாடகத்தில் பணியின் போது உயிர் நீக்கும் போலீசாரின் குடும்பத்துக்கு நிவாரண நிதி உயர்வு
|கர்நாடகத்தில் பணியின் போது உயிர்நீக்கும் போலீசாரின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிவாரண நிதியை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தி முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் பணியின் போது உயிர்நீக்கும் போலீசாரின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிவாரண நிதியை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தி முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.
காவலர் வீர வணக்க நாள்
கர்நாடகத்தில் போலீஸ் துறையில் மொத்தம் 1 லட்சத்து 12 ஆயிரம் போலீசார் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் பணியில் இருக்கும் போது குற்றவாளிகளை பிடிக்க முயலும் போதும், பணியின் போதும் உயிர்நீத்த போலீசார் நினைவாக ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந்தேதி காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சி நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதுபோல் இந்த ஆண்டுக்கான காவலர் வீர வணக்க நாள் நிகழ்ச்சி நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பெங்களூரு மைசூரு ரோட்டில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில், பணியின்போது உயிரிழந்த போலீசாருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், முதல்-மந்திரி சித்தராமையா, போலீஸ் மந்திரி பரமேஸ்வர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.பின்னர் முதல்-மந்திரி சித்தராமையா பேசியதாவது:-
ரூ.50 லட்சமாக உயர்வு
கர்நாடகத்தில் போலீஸ் துறையில் பணியாற்றும் போலீசார் பணியின் போது உயிரிழந்தால், அவர்களது குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிவாரண தொகை ரூ.50 லட்சமாக உயர்த்தப்படும். பொய் செய்திகளை பரப்பி மாநிலத்தில் அமைதியை கெடுக்க சிலர் முயற்சிக்கின்றனர்.
இதுபோன்று பொய் செய்திகளை பரப்புவோர் மீது போலீசார் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அது போலீசாரின் பொறுப்பாகும். சமுதாயத்தில் அனைவரையும் சமமாக கருத வேண்டும். முன்விரோதத்தை மனதில் வைத்து கொண்டு பொய் செய்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க புதிய சட்டங்களையும் அரசு கொண்டு வந்துள்ளது.
கடுமையான நடவடிக்கை
எனவே பொய் செய்திகளை பரப்புவோர் மீதும், அது சம்பந்தப்பட்ட சமூக வலைத்தளங்களை நடத்துவோர் மீதும் எந்தவித பாரபட்சமும் இன்றி போலீசார் சட்டப்படி கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குழந்தைகள், பெண்கள், முதியோருக்கு உரிய பாதுகாப்புகளை போலீசார் வழங்க வேண்டும். பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினை இருந்து வருகிறது. வாகன ஓட்டிகள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநிலத்தில் கூடுதலாக மகளிர் போலீஸ் நிலையங்கள், போக்குவரத்து போலீஸ் நிலையங்கள் அமைக்கப்படும். போலீஸ் துறைக்கு தேவையான புதிய வாகனங்களை வாங்குவதற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2,125 போலீஸ் குடியிருப்புகள் கட்டுவதற்காக ரூ.450 கோடியை அரசு ஒதுக்கி உள்ளது. போலீஸ்காரர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் உடல் நலத்தை பாதுகாக்க ஆரோக்கிய பாக்யா திட்டத்திற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு
போலீஸ் துறையில் பணியாற்றும் போலீஸ்காரர்களின் பிள்ளைகள் படிப்பதற்காக மாநிலத்தில் முதற்கட்டமாக 7 மாவட்டங்களில் 7 போலீஸ் பப்ளிக் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அந்த பள்ளிகள் மூலமாக போலீஸ்காரர்களின் பிள்ளைகளுக்கு தரமான கல்வி கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. போலீசாருக்கு என தனியாக கேண்டீன் திறக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். எந்த மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெடாமல் பாதுகாப்பாகவும், சரியாகவும் உள்ளதோ, அந்த மாநிலம் வளர்ச்சி அடையும். சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பாக இருந்தால் பல்வேறு நிறுவனங்கள் மாநிலத்தில் முதலீடு செய்ய முன்வருவார்கள். அவ்வாறு முதலீடு அதிகரித்தால் வேலை வாய்ப்பு அதிகமாகும்.
மாநிலம் வளர்ச்சி அடையும்
புதிய நிறுவனங்கள், தொழில்கள் தொடங்குவதன் மூலமாக வேலைவாய்ப்பு அதிகரித்தால், மாநிலத்தின் வளர்ச்சி அதிகரிக்கும். மாநிலம் வளர்ச்சி அடைந்தால் மக்களின் வருவாய் அதிகரித்து மகிழ்ச்சியாக வாழ்வார்கள். எனவே மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க போலீசார் கடுமையாக உழைக்க வேண்டும். சட்டம்-ஒழுங்கு சீர்கெடாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை போலீஸ் துறை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரியின் அரசியல் செயலாளர் நசீர் அகமது, மாநில போலீஸ் டி.ஜி.பி. அலோக் மோகன், போலீஸ் கமிஷனர் தயானந்த் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்று இருந்தார்கள்.