கலபுரகி : பா.ஜனதா தொண்டர் தூக்குப்போட்டு தற்கொலை
|கலபுரகி அருகே பா.ஜனதா தொண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது சாவுக்கு மந்திரி சரணபிரகாஷ் பட்டீல் காரணம் என்று ஆடியோ வெளியிட்டதால் பரபரப்பு ஏற்படுள்ளது.
கலபுரகி-
கலபுரகி அருகே பா.ஜனதா தொண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது சாவுக்கு மந்திரி சரணபிரகாஷ் பட்டீல் காரணம் என்று ஆடியோ வெளியிட்டதால் பரபரப்பு ஏற்படுள்ளது.
பா.ஜனதா தொண்டர் தற்கொலை
கலபுரகி மாவட்டம் சிஞ்சோலி தாலுகா சிரோள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 37). கூலித் தொழிலாளியான இவர், பா.ஜனதா கட்சியின் தொண்டர் ஆவார். நேற்று முன்தினம் அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பாக செல்போனில் தான் பேசிய 3 ஆடியோக்களை சிவக்குமார் வெளியிட்டு இருந்தார்.
அதில், தன்னுடைய சாவுக்கு சேடம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், மந்திரியுமான சரணபிரகாஷ் பட்டீல் நேரடி காரணமாகவும், காங்கிரஸ் தொண்டர்கள் என் மீது தாக்குதல் நடத்தி இருந்தார்கள், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சிவக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். தற்போது அந்த ஆடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
விசாரணையில் உண்மை...
இதுகுறித்து சிஞ்சோலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், சிவக்குமார் தற்கொலைக்கு மந்திரி சரண பிரகாஷ் பட்டீல் காரணம் என்று கூறி இருப்பதால், அவர் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரை மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பா.ஜனதா தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து மந்திரி சரணபிரகாஷ் பட்டீல் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், தற்கொலை செய்து கொண்ட சிவக்குமார் யாரென்றே எனக்கு தெரியாது.
அவரை பார்த்தது கூட இலலை. அப்படி இருக்கையில் என் மீது எதற்காக குற்றச்சாட்டு கூறினார் என்பது தெரியவில்லை. இந்த விவகாரத்தை பா.ஜனதாவினர் அரசியல் ஆக்க முயற்சிக்கின்றனர். போலீஸ் விசாரணையில் உண்மை வெளியே வரும், என்றார்.