பெங்களூருவில் நகைக்கடை உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டு 1 கிலோ தங்கம் கொள்ளை
|பெங்களூருவில் பட்டப்பகலில் உரிமையாளரை துப்பாக்கியால் காலில் சுட்டுவிட்டு நகைக்கடையில் 1 கிலோ தங்க நகைகளை மர்மநபர்க் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். அந்த நபர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பெங்களூரு:-
பெங்களூருவில் பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் பற்றிய விவரம் பின்வருமாறு:-
நகைக்கடை
பெங்களூரு பேடரஹள்ளியை சேர்ந்தவர் மனோஜ் லோகர். இவர் அங்குள்ள பைப் லைன் சாலையில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் வழக்கம்போல் நேற்று காலையில் கடைக்கு சென்றார். காலையில் கடையை திறந்தார். பின்னர் அவர் மட்டும் கடையில் அமர்ந்திருந்தார்.
அந்த சமயத்தில் காலை 11 மணி அளவில் 2 மோட்டார் சைக்கிள்களில் தலா 2 மர்மநபர்கள் என மொத்தம் 4 பேர் அவரது கடை முன்பு வந்தனர்.
வாடிக்கையாளர் போல வந்தனர்
பின்னர் அவர்கள் நகை வாங்க வந்த வாடிக்கையாளர்கள் போல மனோஜ் லோகர் கடைக்கு வந்தனர். அவர்களை வரவேற்ற மனோஜ் லோகர், என்ன நகைகள் பார்க்க வேண்டும் என கேட்டப்படி இருந்துள்ளார்.
அந்த சமயத்தில் அவரை மர்மநபர்களில் ஒருவன் கடையின் ஷட்டரை உள்புறமாக பூட்டினான். மற்றொரு மர்மநபர் துப்பாக்கி முனையில் மனோஜ் லோகரை மிரட்டி, நகைக்கடையில் உள்ள நகைகள் மற்றும் பணத்தை தருமாறு கேட்டுள்ளான். ஆனால் நகைக்கடை உரிமையாளர் அதற்கு பயப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் அவர்களை, மனோஜ் லோகர் எதிர்த்து பேசி உள்ளார். அத்துடன் நகைகளை கொடுக்க மறுத்துள்ளார்.
துப்பாக்கியால் சுட்டு கொள்ளை
இதனால் ஆத்திரமடைந்த மர்மநபர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் மனோஜ் லோகரின் காலை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டார். இதில் மனோஜ் லோகரின் தொடைப்பகுதியில் குண்டு துளைத்து ரத்தம் பீறிட்டது.
இதனால் அவர் வலி தாங்க முடியாமல் கத்தி கூச்சலிட்டார். ஆனால் ஷட்டரை மர்மநபர்கள் மூடியிருந்ததால் அவரது சத்தம் வெளியே கேட்கவில்லை. இதற்கிடையே மர்மநபர்கள் கடையில் உள்ள ரூ.50 லட்சம் மதிப்பிலான 1 கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகளை கொள்ளையடித்தனர்.
உரிமையாளருக்கு தீவிர சிகிச்சை
பின்னர் உட்புறமாக பூட்டிய ஷட்டரை மேலே தூக்கி வெளியே மர்மநபர்கள் புறப்பட்டனர். அப்போது ஒரு மர்மநபரை மனோஜ் லோகர் பிடித்துள்ளார். ஆனால் மீண்டும் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிடுவேன் என மிரட்டி அந்த மர்மநபரும், தனது கூட்டாளிகளுடன் மோட்டார் சைக்கிளில் ஏறினார். பின்னர் மின்னல் வேகத்தில் மர்மநபர்கள் மோட்டார் சைக்கிள்களில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
மர்மநபர்கள் வேகவேகமாக மோட்டார் சைக்கிள்களில் செல்வதை பார்த்து சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் மனோஜ் லோகர் கடைக்கு வந்துள்ளனர். அப்போது தான், அவரை மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் தெரியவந்தது.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் மனோஜ் லோகரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தொடைப்பகுதியில் பாய்ந்த குண்டை டாக்டர்கள் அகற்றினர். அதைத்தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீஸ் தீவிர விசாரணை
சம்பவம் குறித்து உடனடியாக பேடரஹள்ளி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இதற்கிடையே போலீசார், கொள்ளை நடந்த நகைக்கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 தனிப்படைகள் அமைப்பு
இதுதொடர்பாக பெங்களூரு மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் கிரிஷ் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், 'பெங்களூரு பேடரஹள்ளியில் உள்ள நகைக்கடைக்குள் புகுந்த மர்மநபர்கள், உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு நகைகளை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
நகைக்கடையை பற்றி நன்கு தெரிந்தவர்கள் தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றுள்ளனர். அவர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மர்மநபர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
பரபரப்பு
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக பேடரஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பட்டப்பகலில் மர்மநபர்கள் நகைக்கடைக்குள் புகுந்து கடை உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்ற துணிகர சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.