உப்பள்ளி ; ஐ.டி.ஐ. மாணவர் கொலை வழக்கில் 2 பேர் கைது
|உப்பள்ளி டவுனில் ஐ.டி.ஐ. மாணவர் கொலை வழக்கில் 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
உப்பள்ளி-
தார்வார் மாவட்டம் உப்பள்ளி சிவள்ளி ரெயில்வே மேம்பாலம் அருகே நேற்றுமுன்தினம் பீர் பாட்டிலால் குத்தப்பட்ட நிலையில் வாலிபர் பிணம் ஒன்று கிடந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அசோக் நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அசோக் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், மர்மநபர்கள் 2 பேர் வருவதும் அவர்கள் பீர்பாட்டில்களை உடைத்து வாலிபரை குத்தி கொலை செய்ததும் தெரியவந்தது.
விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர் ஹாவேரி மாவட்டம் சிக்காமி தாலுகா அனுமதஹள்ளி கிராமத்தை பக்கிரேஷ் சவ்னூர் என்பதும், அவர் தார்வார் உப்பள்ளியில் உள்ள தனியார் ஐ.டி.ஐ. யில் 2-ம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மர்மநபர்களை போலீசார் தேடி வந்தனர்.
மேலும் அவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்தநிலையில், உப்பள்ளி டவுன் பகுதியை சேர்ந்த மஞ்சுநாத் (வயது23), கிரண் (22) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்கள் பக்கிரேசை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். அவர்களிடம் விசாரணையில், பணம் கொடுக்கல் தகராறில் கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், 2 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் மஞ்சுநாத், கிரண் ஆகியோரை கோாட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.