< Back
பெங்களூரு
காவிரி மேலாண்மை கூட்டத்தில் மேகதாது பற்றி பேச தமிழக அரசு எதிர்ப்பது சட்டவிரோதமானது - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
பெங்களூரு

காவிரி மேலாண்மை கூட்டத்தில் மேகதாது பற்றி பேச தமிழக அரசு எதிர்ப்பது சட்டவிரோதமானது - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி

தினத்தந்தி
|
16 Jun 2022 9:45 PM IST

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி பேச தமிழக அரசு எதிர்ப்பது சட்டவிரோதமானது என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, தாவணகெரேயில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

அர்த்தம் இல்லை

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு சுப்ரீம் கோர்ட்டு எந்த தடையும் விதிக்கவில்லை. இந்த விவகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த ஆணையம் இதுவரை 15 கூட்டங்களை நடத்தியுள்ளது. அந்த ஆணையத்தின் அடுத்த கூட்டம் அடுத்த வாரம் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரி மேலாண்மை ஆணையத்தில் இதுகுறித்து விவாதிக்க கூடாது என்று தமிழக அரசு கூறுவதில் அர்த்தம் இல்லை. அவ்வாறு எந்த சட்டமும் இல்லை. இதனை எதிர்ப்பது சட்டவிரோதமானது. மேகதாது திட்டத்திற்கு விரைவில் அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மாவட்ட-தாலுகா பஞ்சாயத்து தேர்தலில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பக்வத்சல குழு முதல்கட்டமாக பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பணியாற்றியுள்ளது. அடுத்து மாவட்ட-தாலுகா பஞ்சாயத்து தேர்தலில் இட ஒதுக்கீடு குறித்து அந்த குழு அறிக்கை வழங்கும். அந்த அறிக்கை அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்.

காங்கிரசார் போராட்டம்

ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதை கண்டித்து காங்கிரசார் போராட்டம் நடத்துவது சரியல்ல. காங்கிரசார் இவ்வாறு செய்தால் அவர்களின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வேண்டிய நிலை வரும். பாடத்திட்டங்களை மாற்றியதில் நடந்த தவறுகளை சரிசெய்ய அரசு திறந்த மனதுடன் தயாராக உள்ளது. நடந்த தவறுகள் திருத்தப்பட்டு வருகின்றன. இதுகுறித்து ஆலோசனைகள் வந்தால் அதை ஏற்கிறோம். பள்ளி கல்வித்துறையின் இணையதள பக்கத்திலும் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. முந்தைய பாடத்திட்டங்கள் குறித்தும் ஆட்சேபனைகள் உள்ளன.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

மேலும் செய்திகள்