< Back
பெங்களூரு
நாட்டில் மத பிரச்சினையை கிளப்பும் பா.ஜனதா-சித்தராமையா பேட்டி
பெங்களூரு

நாட்டில் மத பிரச்சினையை கிளப்பும் பா.ஜனதா-சித்தராமையா பேட்டி

தினத்தந்தி
|
7 Jun 2022 5:03 PM GMT

வேலை இல்லாத இளைஞா்கள் மத்திய அரசுக்கு எதிராக போராடாமல் இருக்க நாட்டில் மத பிரச்சினையை பா.ஜனதா கிளப்புவதாக சித்தராமையா கூறியுள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

இந்திய குடியுரிமை

மக்கள் நன்றாக செலவு செய்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சீராக இருக்கும். நாட்டை ஆட்சி செய்பவர்களுக்கு இது சரியாக தெரியாவிட்டால் நாடு அராஜக பாதையில் தான் செல்லும். இதற்கு நல்ல உதாரணம் இந்தியா. பட்டம் மற்றும் என்ஜினீயரிங் முடித்துள்ள இளைஞர்களுக்கு வேலை இல்லை. நன்றாக படித்தவர்கள், காவலர்கள், டாக்சி ஓட்டுனர்கள், ஜூமோட்டா, ஸ்விக்கி போன்ற நிறுவனங்களில் பணியாற்றுகிறார்கள்.

பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் வெறும் ரூ.10 ஆயிரத்திற்கு வேலை செய்கிறார்கள். மோடி பிரதமரான பிறகு கடந்த 8 ஆண்டுகளில் நமது நாட்டை சேர்ந்த 8 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்து வெளிநாடுகளில் குடியறேி இருக்கிறார்கள். இங்கு எதிர்காலம் இல்லை என்று கருதி வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள். நாட்டில் தற்போது இளைஞர்கள் அதிகமாக உள்ளனர். அடுத்த 15 ஆண்டுகளுக்கு பிறகு வயதானவர்கள் அதிகமாக இருக்கும் நாடாக இந்தியா மாறிவிடும்.

வேலைவாய்ப்புகள்

இளைஞர் சக்தியை நாடு சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மோசமான ஆட்சி நிர்வாகத்தால் நாட்டில் 60 லட்சம் சிறுதொழில்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் அங்கு பணியாற்றியவர்கள் வேலை வாய்ப்புகளை இழந்துவிட்டனர். சிறுதொழில் நிறுவனங்களில் 10 கோடி பேர் பணியாற்றி வந்தனர். அது தற்போது 2½ கோடியாக குறைந்துவிட்டது.

மற்றொருபுறம் அரசு துறைகளில் உள்ள காலியிடங்களையும் நிரப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மத்திய அரசின் துறைகளில் 8.72 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. கர்நாடக அரசு துறைகளில் அனைத்து மாநில அரசுகளில் 45 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. கிராமப்புற வேலை உறுதி திட்டத்திற்கு மத்திய அரசு நடப்பு ஆண்டில் ரூ.73 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. இது போதாது.

மத பிரச்சினை

அரசு மற்றும் தனியார் துறைகளில் அமெரிக்காவில் 1,000 பேரில் 77 பேரும், பிரேசிலில் 111 பேரும், பிரான்சில் 114 பேரும், சீனாவில் 60 பேரும், சுவீடனில் 138 பேரும், நார்வேயில் 160 பேரும் பணியாற்றுகிறார்கள். ஆனால் இந்தியாவில் 1,000 பேரில் 14 பேர் மட்டுமே அரசு மற்றும் தனியார் துறையில் வேலை செய்கிறார்கள். நாட்டில் படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்காத நிலை உள்ளது.

அதனால் இளைஞர்கள் அரசுக்கு எதிராக போராடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மத பிரச்சினைகளை பா.ஜனதா எழுப்புகிறது.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

மேலும் செய்திகள்