< Back
பெங்களூரு
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு:  வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி நீர் செல்கிறது
பெங்களூரு

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு: வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி நீர் செல்கிறது

தினத்தந்தி
|
2 Aug 2022 5:44 PM GMT

கர்நாடக அணைகளில் இருந்து காவேரியில் வினாடிக்கு 35 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.

மைசூரு:

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை மீண்டும் வேகமெடுக்க தொடங்கி உள்ளது. இதனால் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதேபோல், குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாட்டில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கும், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் உள்ள கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் நேற்று முழுகொள்ளளவுடன் தண்ணீர் இருந்தது.

அணைக்கு வினாடிக்கு 30,580 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 30,505 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் நேற்று 2,283.55 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 7,920 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 35,505 கனஅடி தண்ணீர் அகண்ட காவிரியாக தமிழகத்துக்கு செல்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மழை குறைந்ததால் அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டிருந்தது. தற்போது தண்ணீர் திறப்பு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்