உடுப்பியில், 6 நம்ம கிளினிக்குகள் விரைவில் தொடங்கப்படும் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி தகவல்
|உடுப்பியில் 6 நம்ம கிளினிக்குகள் விரைவில் தொடங்கப்படும் என்று மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உடுப்பி:
உடுப்பி மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரி டாக்டர் நாகபூஷன் உடுபா தெரிவித்ததாவது:-
கர்நாடகத்தில் பொதுமக்களுக்கு விரைவான மற்றும் தரமான சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கத்தில் கர்நாடக மாநில அரசு நம்ம கிளினிக் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி உடுப்பி மாவட்டத்தில் 6 நம்ம கிளினிக்குகள் விரைவில் செயல்பட தொடங்கும். இது ஆரம்ப சுகாதார நிலையப்பணிகளை பரவலாக்குவதுடன், தொற்றுநோய்களை கண்காணிப்பதையும் மேம்படுத்தும். இந்த நம்ம கிளினிக்கில் ஒரு டாக்டர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு மருத்துவ ஊழியர், ஒரு லேப் டெக்னீஷியன் இருப்பார்கள்.
இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் தேவையான மருந்துகள் வழங்கப்படும். ரத்தம், சிறுநீர் உள்பட 14 வகையான மருத்துவ பரி சோதனைகள் செய்யப்படும். தினமும் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை நம்ம கிளினிக் செயல்படும். உடுப்பி நகரில் 3 கிளினிக்குகள், கார்கலாவில் ஒரு கிளினிக், குந்தாப்புரா நகரில் 2 கிளினிக்குகள் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகிறது. உடுப்பி நகரில் செயல்பட உள்ள 3 கிளினிக்குகளுக்கும் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்காணல் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.