மைசூரு அரண்மனையில் நவரத்தினங்களால் ஆன சிம்மாசனம் ஜோடிப்பு
|மைசூரு அரண்மனையில் நவரத்தினங்களால் ஆன சிம்மாசனம் நேற்று ஜோடிக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த பணி நடந்தது.
மைசூரு
தசரா விழா
உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா வருகிற 15-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை 10 நாட்கள் கோலாகலமாக நடக்க உள்ளது. வருகிற 15-ந்தேதி சாமுண்டி மலையில் வைத்து நடக்கும் விழாவில் இசையமைப்பாளர் ஹம்சலேகா சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு மலர் தூவி தசரா விழாவை தொடங்கி வைக்க உள்ளார்.
அதே நேரத்தில் மைசூரு அரண்மனையில் மன்னர் குடும்பத்தினர் சார்பிலும் தசரா விழா தொடங்கப்படுகிறது. தசரா விழாவையொட்டி மன்னர் யதுவீர் அரண்மனையில் அம்பாவிலாஸ் அறையில் தனியார் தர்பார் நடத்துவார். இதற்காக அவர் தங்கம், வைரம், வைடூரியம் உள்ளிட்ட நவரத்தினங்களால் ஆன சிம்மாசனத்தில் அமர்ந்து தர்பார் நடத்துவார்.
சிம்மாசனம் ஜோடிப்பு
இந்த தர்பார் நடத்துவதற்காக நேற்று மைசூரு அரண்மனையில் நவரத்தினங்களால் ஆன சிம்மாசனம் ஜோடிக்கும் பணி நடந்தது. முன்னதாக அரசு கருவூலத்தில் 9 பாகங்களாக இருந்த சிம்மாசனம் கலெக்டர் ராஜேந்திரா முன்னிலையில் எடுக்கப்பட்டு அரண்மனை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக காலை அரண்மனையில் சண்டி ஹோமம், கணபதி ஹோமம், சாமுண்டீஸ்வரி ஹோமம், நவகிரக பூஜை நடந்தது.
இதையடுத்து காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை அம்பா விலாஸ் அறையில் சிம்மாசனத்தை ஜோடிக்கும் பணிகள் நடந்தது. இந்த பணியில் ஸ்ரீரங்கப்பட்டணாவை சேர்ந்த 6 பேர் ஈடுபட்டனர். அவர்கள் 9 பாகங்களாக இருந்த சிம்மாசனத்தை ஜோடித்தனர்.
மகாராணி பிரமோதா தேவி, மன்னர் யதுவீர், கலெக்டர் ராஜேந்திரா, போலீஸ் கமிஷனர் ரமேஷ் முன்னிலையில் இந்த பணி நடந்தது. இந்த சிம்மாசன ஜோடிப்பு பணியையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
சுற்றுலா பயணிகளுக்கு தடை
சிம்மாசனம் ஜோடிப்பு பணி முடிந்ததும் மன்னர் யதுவீர் சிம்மாசனத்துக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். பின்னர் சிம்மாசனம் வெள்ளை துணியால் மூடி வைக்கப்பட்டது. தசரா விழா தொடங்கும் அன்று அந்த சிம்மாசனத்தில் அமர்ந்து மன்னர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவார். தசரா விழா முடிந்ததும் சிம்மாசனம் 9 பாகங்களாக பிரிக்கப்பட்டு அரசு கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும்.
சிம்மாசனம் ஜோடிப்பு பணி நடந்ததால் நேற்று காலை முதல் மதியம் வரை அரண்மனைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.