< Back
பெங்களூரு
ஆரோக்கியமான ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகளும் இருக்க வேண்டும்; சித்தராமையா பேட்டி
பெங்களூரு

ஆரோக்கியமான ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகளும் இருக்க வேண்டும்; சித்தராமையா பேட்டி

தினத்தந்தி
|
31 July 2022 3:11 PM GMT

ஆரோக்கியமான ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகளும் இருக்க வேண்டும் என்று சித்தராமையா கூறியுள்ளார்.

பெங்களூரு:

முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

முடிவு முக்கியமானது

எனது 75-வது பிறந்த நாளையொட்டி தாவணகெரேயில் 3-ந் தேதி பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார். அதனால் இந்த பொதுக்கூட்டத்தால் அரசியல் ரீதியாக காங்கிரசுக்கு ஆதாயம் தான். நான் எப்போதும் பிறந்த நாளை கொண்டாடியது இல்லை. எனது ஆதரவாளர்கள் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். ஒருவர் தனது வாழ்க்கையில் 75 ஆண்டுகளை பூர்த்தி செய்வது என்பது முக்கியமான விஷயம். இதில் 40 ஆண்டுகள் அரசியலில் இருந்துள்ளேன்.

இந்த பிறந்த நாள் விழாவால் யாருக்கும் எந்த அதிருப்தியும் இல்லை. அனைவரும் மகிழ்ச்சியுடன் இந்த விழாவில் கலந்துகொள்கிறார்கள். தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் எம்.எல்.ஏ.க்களின் கருத்து மற்றும் கட்சி மேலிடத்தின் முடிவு அடிப்படையில் முதல்-மந்திரி தேர்வு செய்யப்படுவார். முதல்-மந்திரி பதவி மீது யார் வேண்டுமானாலும் ஆசைப்படலாம். ஆனால் கட்சி மேலிடத்தின் முடிவு முக்கியமானது.

கருத்து வேறுபாடு இல்லை

காங்கிரஸ் எப்போதும் சமுகநீதியை பின்பற்றுகிறது. கட்சியில் பெரிய தலைவர்கள் உள்ளனர். ஆனால் அனைத்து சாதி-மத தலைவர்களும் முக்கியம். கர்நாடக பா.ஜனதா அரசு 40 சதவீத கமிஷன் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது. பொருளாதார ரீதியாக கர்நாடக அரசு திவாலாகிவிட்டது. இந்த பா.ஜனதா அரசின் தோல்விகள், தவறுகளை மக்களிடம் எடுத்து கூறுவோம். கர்நாடகத்தின் கடன் அதிகரித்துவிட்டது. வரி வருவாய் குறைந்துள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இதை சரிசெய்வோம்.

எனக்கும்-டி.கே.சிவக்குமாருக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் சில சக்திகள் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்த முயற்சி செய்கின்றன. ஆரோக்கியமான ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகளும் இருக்க வேண்டும். ஆனால் அது கட்சியின் நலனுக்கு எதிராக இருக்க கூடாது. மொத்தத்தில் கட்சியை ஆட்சியில் அமர வைக்க அனைவரும் இணைந்து பணியாற்றி வருகிறோம். நான் காங்கிரசில் சேர்ந்த பிறகு முதல்-மந்திரி பதவி கிடைத்தது. இதற்காக நான் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு நன்றி உள்ளவனாக இருக்கிறேன். கட்சியை மீண்டும் ஆட்சி பீடத்தில் அமர வைக்க நான் முயற்சி செய்து வருகிறேன்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

மேலும் செய்திகள்