தொழிலாளி வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் -வாலிபர் உள்பட 5 பேர் கைது
|தொழிலாளி வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் வாலிபர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். வாலிபரின் சகோதரியை தொழிலாளி அடைய முயன்றதால் தீர்த்துக்கட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
பெலகாவி:
ஆசை வலையில் வீழ்த்த திட்டம்
பெலகாவி மாவட்டம் மலகவி கிராமத்தை சேர்ந்தவர் எல்லேஷ் கோல்கர் (வயது 37). கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் சந்தீப் கோல்கர். இந்த நிலையில் எல்லேஷ், சந்தீப் கோல்கரின் திருமணமான சகோதரி மீது ஆசை கொண்டு அவரை அடைய முயற்சி செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இதை அறிந்த சந்தீப் கோல்கர் கண்டித்துள்ளார். இருப்பினும் எல்லேஷ், சந்தீப் கோல்கரின் சகோதரியை தனது வலையில் வீழ்த்த திட்டமிட்டும் காய்களை நகர்த்தி வந்துள்ளார்.
வெட்டிக்கொலை
இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் 1-ந்தேதி சந்தீப் கோல்கர் தனது நண்பர்களுடன் சென்று பயங்கர ஆயுதங்களால் எல்லேசை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த எல்லேஷ் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து செத்தார். இதையடுத்து 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதில் கொலையான எல்லேசின் முகத்தில் பல இடங்களில் வெட்டு விழுந்ததில் முகத்தை முதலில் அடையாளம் காண முடியாமல் போலீசார் திணறினர். பின்னர் தீவிர விசாரணையில் தான் கொலையானது எல்லேஷ் என்பதும், அவரை சந்தீப் கோல்கர் தனது நண்பர்களுடன் சேர்ந்து, சகோதரியை அடைய முயன்றதால் தீர்த்துக்கட்டியது தெரியவந்தது.
5 பேர் கைது
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பெலகாவி போலீசார் தலைமறைவான சந்தீப் கோல்கர், அவரது நண்பர்கள் 4 பேரையும் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சந்தீப் கோல்கர், அவரது நண்பர்கள் குமார் ராஜங்கல், ரவி குள்ளகொப்பா, பிரதீப் கோல்கர், சிவக்குமார் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பெலகாவி இண்டல்கா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த கொலை சம்பவத்தில் கொலை நடந்த 12 மணி நேரத்தில் போலீசார் துப்பு துலக்கி கொலையாளிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.