காதலனுடன் ஓடியதால் 17 வயது சிறுமி ஆணவக்கொலை
|பெங்களூருவில் காதலனுடன் ஓடியதால் 17 வயது சிறுமியை ஆணவக் கொலை செய்த அவரது தந்தையை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெங்களூரு:
பெங்களூருவில் காதலனுடன் ஓடியதால் 17 வயது சிறுமியை ஆணவக் கொலை செய்த அவரது தந்தையை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
காதலனுடன் ஓட்டம்
மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டையை சேர்ந்தவர் கணேஷ் (வயது 40). இவரது மகள் பல்லவி (வயது 17). கணேஷ், தனது மனைவி மற்றும் மகள் பல்லவியுடன் பெங்களூருவில் வசித்து வந்தார். அந்த சிறுமி அருகில் உள்ள பள்ளியில் படித்து வந்தாள். இந்த நிலையில் அதே பள்ளியில் படிக்கும் மாணவரும், பல்லவியும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் கணேசிற்கு தெரியவந்தது. இதனால் அவர் மகள் பல்லவியை கண்டித்துள்ளார்.
இந்த நிலையில் பல்லவி தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடினாள். இதுகுறித்து அறிந்த கணேஷ், தனது மகளை பல்வேறு இடங்களில் தேடினார். இந்த நிலையில் பல்லவி தனது காதலனுடன் பரப்பனஅக்ரஹாரா பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் இருப்பது தெரியவந்தது.
ஆணவக் கொலை
இதுபற்றிய தகவல் அறிந்ததும் கணேஷ், அங்கு சென்று வாக்குவாதம் செய்தார். மேலும் காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய தனது மகள் பல்லவியை சரமாரியாக தாக்கினார். ஆனாலும் ஆத்திரம் தீராத கணேஷ், அங்கு இருந்த ஆயுதத்தை எடுத்து பல்லவியை சரமாரியாக தாக்கினார். இதில் பல்லவி சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கணேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் பரப்பன அக்ரஹாரா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் கொலையான பல்லவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், காதலனுடன் வீட்டை விட்டு ஓடியதால் மகளை ஆயுதங்களால் தாக்கி கணேஷ் ஆணவ கொலை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து பரப்பன அக்ரஹாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.