சாம்ராஜ்நகர், மண்டியாவில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை: காவிரி நீரேற்று நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது-வீடு இடிந்து வாலிபர் பலி; 45 ஆடுகள் செத்தன
|சாம்ராஜ்நகர், மண்டியாவில் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் காவிரி நீரேற்று நிலையம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. வீடு இடிந்து விழுந்து வாலிபர் உயிரிழந்தார். மேலும் 45 ஆடுகளும் செத்தன.
கொள்ளேகால்:
தொடர் கனமழை
கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆரம்பத்தில் போக்கு காண்பித்த மழை, கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்டு மாத தொடக்கத்தில் வெளுத்து வாங்கியது. இதனால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையிலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் பேய் மழை பெய்து வருகிறது. இதனால் நகரமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதேபோல், மண்டியா, சாம்ராஜ்நகர், மைசூரு மாவட்டங்களிலும் இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
நீரேற்று நிலையம் மூழ்கியது
மண்டியா மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை பெய்ய தொடங்கிய மழை நேற்று காலை வரை விடிய, விடிய கொட்டி தீர்த்தது. இந்த கனமழையால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மண்டியா அருகே டி.கே.ஹள்ளி பகுதியில் பெங்களூருவுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் காவிரி நீரேற்று நிலையம் தண்ணீரில் மூழ்கி உள்ளது.
இதனால் அங்குள்ள எந்திரங்கள் பழுதாகி உள்ளதால் பெங்களூரு நகருக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மலவள்ளி தாலுகா ஹலகூர் அருகே ஓடும் பீமா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஹொனனஹள்ளி கிராமத்தில் தண்ணீர் புகுந்தது. அந்த கிராமத்தை சேர்ந்த ஜமீல் பாஷா என்பவரின் ஆட்டு கொட்டகைக்குள் தண்ணீர் புகுந்து 45 ஆடுகள் செத்தன. மேலும் ஒரு மாடும் செத்தது. பீமா ஆற்றில்
வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஆற்றங்கரையோரத்தில் உள்ள பல பகுதிகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
வாலிபர் பலி
தொடர் கனமழையால் ஹலகூர் அருகே தளவாய் கோடஹள்ளி கிராமத்தில் உள்ள ஹொனகனஹள்ளி ஏரி நிரம்பி மறுகால் பாய்கிறது. இதனால் அருகே உள்ள கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. கடைகள், வீடுகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.
இதேபோல் சாம்ராஜ்நகர் மாவட்டத்திலும் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை விடிய, விடிய கனமழை கொட்டியது. இந்த கனமழையால் சாம்ராஜ்நகர் அருகே தாடதஹள்ளி கிராமத்தில் ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதனால் அங்கு தூங்கி கொண்டிருந்த மூர்த்தி (வயது 32) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
வெள்ளப்பெருக்கு
சாம்ராஜ்நகரில் உள்ள இரட்டை நீர்தேக்கங்களான சிக்கஒலே, சுவர்ணாவதி அணைகள் நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் சுவர்ணாவதி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சந்தகாவடி பகுதியில் உள்ள ஏரி நிரம்பி மறுகால் பாய்கிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினார்கள். பாலத்தின் மீது தண்ணீர் செல்வதால் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
சுவர்ணாவதி கால்வாயில் அபாய அளவை தாண்டி தண்ணீர் செல்கிறது. இதனால் ஜோதிகவுடாபூர், ஹெப்பசூர், நல்லூர், சந்தகவாடி பகுதிகளில் உள்ள விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகின.
திருமண நிகழ்ச்சி பாதிப்பு
விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழையால் நகரில் ராசய்யா ரோட்டில் உள்ள இந்திரா உணவகத்துக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் சத்தியமங்கலம் சாலையில் உள்ள திருமண மண்டபத்துக்குள்ளும் தண்ணீர் நுழைந்தது. முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியதால் திருமண நிகழ்ச்சி பாதிக்கப்பட்டது. சமையல் அறையில் பாத்திரங்கள் தண்ணீரில் மிதந்தன.
சாம்ராஜ்நகர் தாலுகா ஹரடஹள்ளி கிராமத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க திவ்யலிங்கேஸ்வரர் கோவிலுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினார்கள். தொடர் கனமழையால் பல கிராமங்களின் சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.
மைசூரு
மேலும் மைசூரு மாவட்டத்திலும் இடைவிடாது பலத்த மழை கொட்டியது. கெரேகெம்மனஹள்ளியில் உள்ள கோவிலுக்குள் தண்ணீர் புகுந்ததால் பக்தர்கள் அவதி அடைந்தனர். மேலும் மாவட்டத்தில் ஏராளமான ஏரிகள் நிரம்பி மறுகால் பாய்கிறது. கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் மாநிலத்தில் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.