பெங்களூருவில் 2-வது நாளாக விடிய, விடிய கனமழை
|பெங்களூருவில் ராஜாஜிநகர் உள்பட பெங்களூருவில் பல இடங்களில் 2-வது நாளாக நேற்று விடிய, விடிய கனமழை பெய்தது. தொடர் கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கடுத்து ஓடியதால் வாகன போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.
பெங்களூரு:-
பெங்களூருவில் திடீர் மழை
கர்நாடகத்தில் இம்மாத இறுதிக்குள் வடகிழக்கு பருவமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் கடந்த சில நாட்களாக தலைநகர் பெங்களூரு உள்பட பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு திடீரென கனமழை பெய்தது.
இதனால் ஒரு சில இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் 2-வது நாளாக நேற்றும் பெங்களூருவில் மழை வெளுத்து வாங்கியது.
நள்ளிரவு வரை நீடித்த மழை
மாலை 4 மணி அளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து திடீரென மழை பெய்ய தொடங்கியது. முதலில் லேசாக பெய்யத்தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல கனமழையாக கொட்டியது. இந்த மழை நள்ளிரவு வரை நீடித்தது. பெய்த மழையால் ராஜாஜிநகர், யஷ்வந்தபுரம், சேஷாத்திரிபுரம், அல்சூர், சிவாஜிநகர், ஜெயநகர், மைசூரு ரோடு, துமகூரு ரோடு, ஹெப்பால், சதாசிவநகர், மடிவாளா, சாந்திநகர் உள்பட பல்வேறு இடங்களில் சாலைகளில் மழை நீர்ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் சுரங்க சாலைகளில் மழைநீர் தேங்கியதால், அவற்றை தற்காலிகமாக போலீசார் மூடினர். மேலும் தாழ்வான சாலைகளில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். ஹெப்பால் மேம்பாலம் அருகே தேங்கிய மழைநீரால், அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மரங்கள் முறிந்தன
இதேபோல் பெல்லந்தூர் மான்யாடெக் பூங்கா அருகே உள்ள மேம்பாலத்தில் மழைநீர் தேங்கியது. இதையடுத்து உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் வந்து மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சதாசிவநகர், ஜெயநகர் உள்ளிட்ட பகுதியில் சாலையோரம் நின்ற மரங்கள் முறிந்து விழுந்தன. ஒரு சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து அங்கு நிறுத்தி இருந்த கார்கள் மீது விழுந்தன. துமகூரு சாலையில் மழைநீர் தேங்கியது. இதனால் அந்த சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்து கடந்து சென்றன.
கே.ஆர்.புரம் பகுதியில் குளம் போல் சாலையில் மழைநீர் தேங்கியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் பெங்களூருவில் உள்ள சுரங்க சாலை பகுதிகளில் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டு, அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுத்தனர்.
கனமழைக்கு வாய்ப்பு
2-வது நாளாக நள்ளிரவு வரை நீடித்த கனமழையால் பெங்களூரு வாசிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடலோர மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வருகிற 21-ந் தேதி வரை பெங்களூரு உள்பட பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.