< Back
பெங்களூரு
அக்னிபத் போராட்டம் எதிரொலியாக கர்நாடகத்தில் ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
பெங்களூரு

அக்னிபத் போராட்டம் எதிரொலியாக கர்நாடகத்தில் ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

தினத்தந்தி
|
18 Jun 2022 8:49 PM IST

அக்னிபத் போராட்டம் எதிரொலியாக கர்நாடகத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

பெங்களூரு:

ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு

ராணுவத்துக்கு ஆள்சேர்க்க அக்னிபத் என்ற புதிய திட்டத்தை கடந்த 14-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. இந்த புதிய திட்டத்தின் மூலம் 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் பணிக்கு சேர்க்கப்படுகிறார்கள். இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் போராட்டம் தீவிரம் எடுத்து உள்ளது. பீகார், உத்தரபிரதேசத்தில் ரெயில்களை வாலிபர்கள் தீ வைத்து எரித்தனர். தென்மாநிலமான தெலுங்கானாவிலும் நேற்று வன்முறை வெடித்தது. செகந்திரபாத்தில் நிறுத்தப்பட்டு இருந்த ரெயில்களுக்கு இளைஞர்கள் கும்பல் தீ வைத்து இருந்தது.

தென்மாநிலத்திலும் அக்னிபத்திற்கு எதிராக போராட்டம் தொடங்கியுள்ளதால் கர்நாடகத்தில் அக்னிபத்திற்கு எதிரான போராட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக பெங்களூரு, மைசூரு, உப்பள்ளி உள்பட மாநிலம் முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ரெயில் நிலையங்களுக்கு வரும் இளைஞர்களை தீவிர பரிசோதனைக்கு பிறகே போலீசார் ரெயில் நிலையங்களுக்குள் அனுமதிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தண்டால் எடுத்து எதிர்ப்பு

இந்த நிலையில் அக்னிபத்திற்கு எதிராக வடகர்நாடக மாவட்டமான பெலகாவியில் இளைஞர்கள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். நிப்பானியில் உள்ள தாசில்தார் அலுவலகம் முன்பு கூடிய இளைஞர்கள் அக்னிபத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர். அப்போது இந்த திட்டத்தை கைவிட வலியுறுத்தி இளைஞர்கள் தண்டால் எடுத்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதுபோல கானாபுராவிலும் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் கானாபுரா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அஞ்சலி நிம்பால்கர் கலந்து கொண்டு அக்னிபத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கோஷம் எழுப்பினார். அப்போது காங்கிரஸ் துண்டுதலால் தான் இளைஞர்கள் அக்னிபத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவதாக பா.ஜனதா குற்றச்சாட்டு கூறியுள்ளது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அம்மாவாக வந்து உள்ளேன்

அப்போது அஞ்சலி நிம்பால்கர் கூறுகையில், அக்னிபத்திற்கு எதிராக இளைஞர்கள் நடத்தும் போராட்டத்திற்கும், காங்கிரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இளைஞர்கள் வாழ்க்கையில் மத்திய அரசு விளையாடுகிறது. நான் இங்கு போராட்டம் நடத்த எம்.எல்.ஏ.வாக வரவில்லை. இளைஞர்களின் சகோதரி, அம்மாவாக வந்து உள்ளேன். அக்னிபத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி எனது தொகுதியான கானாபுராவில் 20-ந் தேதி (நாளை) முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த முழு அடைப்புக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.

தார்வாரில் தடியடி

தார்வாரில் அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். தார்வாரில் உள்ள கலா பவனில் கூடிய வாலிபர்கள், அங்கிருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது போலீசார், போராட்டக்காரர்களை கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால், அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். இதனால் போராட்டக்காரர்கள் நாலாபுறமும் சிதறி அடித்துஓடினார்கள். இதன்காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்