தசரா விழாவையொட்டி மைசூருவில் 5 ஆயிரம் போலீசார் குவிப்பு
|பயங்கரவாத அச்சுறுத்தலை தொடர்ந்து தசரா விழாவையொட்டி மைசூருவில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்கு 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
மைசூரு:
பயங்கரவாத அச்சுறுத்தலை தொடர்ந்து தசரா விழாவையொட்டி மைசூருவில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்கு 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
உலக புகழ்பெற்ற தசரா விழா
கர்நாடகத்தின் விழா என மைசூரு மாநகர் விழாக்கோலம் பூண்டு தசரா விழா உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில் மைசூரு தசரா விழாவுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய அரசின் உள்துறை, கர்நாடக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய அரசு எச்சரிக்கை
அதாவது பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் 70 பேர் போலி பாஸ்போர்ட்டுடன் இந்தியாவுக்குள் நுழைந்து இருப்பதாகவும், நாட்டில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வரும் நிலையில் நவராத்திரி விழா கொண்டாட்டம் நடப்பதால் அவர்கள் நாச வேலைகளில் ஈடுபட திட்டமிட்டு இருக்கலாம் எனவும், எனவே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படி அனைத்து மாநில உள்துறையையும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
குறிப்பாக உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருக்கலாம் எனவும், எனவே மைசூருவில் பாதுகாப்பை பலப்படுத்தும் படியும் கர்நாடக உள்துறைக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
5 ஆயிரம் போலீசார் குவிப்பு
இதையடுத்து கர்நாடக போலீஸ் மந்திரி ஜி.பரமேஸ்வர், கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. அலோக்மோகன் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் மைசூரு தசரா விழாவையொட்டி கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி தற்போது மைசூரு நகரில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். எப்போதும் தசரா விழாவையொட்டி 1,500 முதல் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஆனால் பயங்கரவாத அச்சுறுத்தலை தொடர்ந்து கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
கண்காணிப்பு பணி
மேலும் தசரா விழா நிகழ்ச்சிகள் நடைபெறும் மைசூரு அரண்மனை, மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில், முக்கிய வீதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதுதவிர தசரா ஊர்வலம் தொடங்கும் அரண்மனை முதல் பன்னிமண்டபம் நடைபெறும் 5 கிலோ மீட்டர் தூரம் வழிநெடுகிலும் உயர் கோபுரங்கள் அமைத்தும் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை, பிருந்தாவன் கார்டன், பஸ், ரெயில் நிலையங்களிலும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
ஓட்டல்கள், தங்கும்விடுதிகள்
அத்துடன் மைசூரு மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், சொகுசு விடுதிகளிலும் சோதனை நடத்தி வருகிறார்கள். வெளிமாநிலம், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் யாராவது அறை வாடகைக்கு எடுத்து தங்கினால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படியும் போலீசார் ஓட்டல், தங்கும் விடுதி உரிமையாளர்களிடம் அறிவுறுத்தி உள்ளனர். அத்துடன் மாவட்டத்தின் எல்லைகளிலும் சோதனை சாவடிகளில் தீவிர சோதனையில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.