< Back
பெங்களூரு
பெங்களூருவை பாழாக்க பா.ஜனதா அனுமதிக்காது; முன்னாள் மந்திரி ஆர்.அசோக் எச்சரிக்கை
பெங்களூரு

பெங்களூருவை பாழாக்க பா.ஜனதா அனுமதிக்காது; முன்னாள் மந்திரி ஆர்.அசோக் எச்சரிக்கை

தினத்தந்தி
|
26 Oct 2023 12:15 AM IST

கனகபுராவை சேர்க்கும் விஷயத்தில் பெங்களூருவை பாழாக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரி ஆர்.அசோக் கூறியுள்ளார்.

பெங்களூரு:

கனகபுராவை சேர்க்கும் விஷயத்தில் பெங்களூருவை பாழாக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரி ஆர்.அசோக் கூறியுள்ளார்.

பா.ஜனதாவை சேர்ந்த கர்நாடக முன்னாள் மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மக்கள் போராட்டம்

துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தான் ஒரு தொழில் அதிபர் என்று பல முறை கூறியுள்ளார். அரசியல் தனது பழக்கம் என்று அவர் தெரிவித்துள்ளார். அதனால் அவர் என்ன செய்தாலும் தொழில் தான் முதல் இடத்தை பிடிக்கிறது. அதன் பிறகே அவர் அரசியலுக்கு இடம் கொடுக்கிறார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு 110 கிராமங்கள் பெங்களூரு மாநகராட்சியில் சேர்க்கப்பட்டன.

அதில் 30 சதவீத பகுதிகள் இன்னும் மேம்படுத்தப்படவில்லை. இதற்காக அந்த மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். இப்போது கனகபுராவை பெங்களூருவில் சேர்ப்பதாக டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். ஹாரோஹள்ளி தாண்டி 10 கிலோ மீட்டர் தூரம் வரை கனகபுராவுக்கு சேருகிறது. ஒசக்கோட்டை நிலை என்ன?. டி.கே.சிவக்குமாரின் பேச்சின் உள்நோக்கம், கட்டுமான தொழில் செய்வோருக்கு உதவி செய்ய வேண்டும் என்பது தான்.

பாழாக்க சதி

சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள தேவனஹள்ளியின் நிலை என்ன?. அது பெங்களூருவின் எல்லையில் தான் உள்ளது. இந்த பகுதிகளை எல்லாம் பெங்களூருவில் சேர்த்து மஞ்சள், பச்சை, வணிகம், குடியிருப்பு பகுதி என பிரிக்க திட்டமிட்டுள்ளனர். பெங்களூரு அருகே உள்ள ஓசூரையும் இங்கு சேர்த்துக் கொள்ளுங்கள். இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சருடன் டி.கே.சிவக்குமார் பேச வேண்டும். பெங்களூருவை பாழாக்க என்னென்ன சதி செய்ய வேண்டுமோ அந்த சதியை செய்து விடுங்கள். 50 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் பெங்களூருவின் வளர்ச்சிக்கு எதையும் செய்யவில்லை. பெங்களூரு மக்கள் நிம்மதியாக உள்ளனர். கனகபுராவை இங்கு சேர்த்தால், பெங்களூரு மக்களின் நிலை என்ன?.

வளர்ச்சி திட்டங்கள்

பெங்களூருவை பாழாக்க நாங்கள்(பா.ஜனதா) அனுமதிக்க மாட்டோம். தற்போது உள்ள பகுதிகளை மேம்படுத்த வேண்டும். வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி இல்லை என்று ஏற்கனவே முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார். சாலைகள் மோசமாக உள்ளன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழிகள் இருக்கின்றன. டி.கே.சிவக்குமாரின் கருத்துக்கு பெங்களூரு மக்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். சித்தராமையா முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பிறகு அவரை பார்க்கவே முடியவில்லை.

இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.

மேலும் செய்திகள்