எம்.எல்.ஏ. சீட் தருவதாக கூறி ஓய்வுபெற்ற என்ஜினீயரிடம் ரூ.2 கோடி மோசடி
|எம்.எல்.ஏ. சீட் தருவதாக கூறி ஓய்வு பெற்ற என்ஜினீயரிடம் ரூ.2 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.
விஜயநகர்:
எம்.எல்.ஏ. சீட் தருவதாக கூறி ஓய்வு பெற்ற என்ஜினீயரிடம் ரூ.2 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிட...
உடுப்பியை சேர்ந்த தொழில் அதிபர் கோவிந்தபாபு பூஜாரியிடம் பா.ஜனதா சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.5 கோடி மோசடி செய்யப்பட்டது. இதுதொடர்பாக இந்து அமைப்பு பெண் பிரமுகர் சைத்ரா உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் எம்.எல்.ஏ. சீட் தருவதாக கூறி ஓய்வு பெற்ற என்ஜினீயரிடம் ரூ.2 கோடி மோசடி செய்யப்பட்ட சம்பவம் விஜயநகர் மாவட்டத்தில் நடந்துள்ளது. விஜயநகர் மாவட்டம் அகரிபொம்மனஹள்ளி தொகுதி கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் சிவமூர்த்தி. இவர் ஓய்வுபெற்ற என்ஜினீயர் ஆவார். இவருக்கு முன்னாள் பா.ஜனதா பிரமுகர் ரேவண சித்தப்பா மற்றும் புத்தூரை சேர்ந்த சேகர் ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. இந்த நிலையில் அவர்கள் பா.ஜனதா சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் வாங்கி தருவதாக சிவமூர்த்தியிடம் கூறி பெங்களூருவில் உள்ள தனியார் ஓட்டலுக்கு அழைத்து வந்து பேசினர். மேலும் அகரிபொம்மனஹள்ளி தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட சீட் வழங்குவதற்கு ரூ.2 கோடி கொடுக்குமாறு கூறினார்.
போலீசில் புகார்
அதன்படி சிவமூர்த்தி அவர்களிடம் ரூ.2 கோடியை கொடுத்துள்ளார். ஆனால் அவருக்கு எம்.எல்.ஏ. சீட் கொடுக்கப்படவில்லை. இதையடுத்து அவர் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணத்தை திரும்ப கொடுக்க மறுத்துவிட்டனர். மேலும் போலி காசோலை கொடுத்தும் சிவமூர்த்தியை ஏமாற்றி உள்ளனர். மோசடி செய்யப்பட்டதை அறிந்த சிவமூர்த்தி, இதுபற்றி கோட்டூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த மோசடி குறித்து முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி ஆகியோரையும் சந்தித்து புகார் அளித்துள்ளார்.