தசரா யானைகளுக்கு, பீரங்கி வெடிசத்த பயிற்சி அடுத்த வாரம் தொடங்குகிறது
|மைசூரு தசரா யானைகளுக்கு, பீரங்கி வெடி சத்த பயிற்சி அடுத்த வாரம் தொடங்குகிறது.
மைசூரு:
மைசூரு தசரா விழா
உலக புகழ் பெற்ற மைசூரு தசரா விழா, வருகிற 26-ந்தேதி தொடங்கி அக்டோபர் 5-ந்தேதி வரை 10 நாட்கள் வரை நடக்கிறது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக எளிமையாக நடந்த நிலையில் இந்தாண்டு தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தசரா விழாவுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அந்த வகையில் மைசூரு அரண்மனை வளாகத்தில் ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்கும் தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு உள்பட 9 யானைகள் வரவழைக்கப்பட்டு அவைகளுக்கு நடைபயிற்சி, பாரம் சுமக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன.
வெடிகுண்டு சத்த பயிற்சி
இந்த நிலையில் அடுத்த மாதம்(செப்டம்பர்) முதல் வாரத்தில் இருந்து யானைகளுக்கு, பீரங்கி வெடி சத்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் 3-ம் கட்ட பாரம் சுமக்கும் பயிற்சி அதாவது 750 கிலோ எடையிலான மணல் மூட்டை சுமத்தி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நேற்று மைசூரு அரண்மனை யானை வாயில் என்று அழைக்கப்படும் இடத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 6 பீரங்கிகளை, நிபுணர்கள் குழுவினர் துடைத்து சுத்தம் செய்தனர். இதையடுத்து மந்திரி எஸ்.டி.சோமசேகர் தலைமையில் பீரங்கிகளுக்கு பூஜை செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டது.
அதன்படி செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து அரண்மனை பின்புற பகுதியில் இருக்கும் கோட்டை மாரியம்மன் கோவில் அருகே உள்ள மைதானத்தில் தசரா யானைகளுக்கு, வெடிகுண்டு சத்தம் மற்றும் வெடி குண்டு நெடியை தாங்கும் பயிற்சி கொடுக்கப்படுகிறது. வாரத்தில் 2 நாட்கள் என்று 3 வாரங்கள் பீரங்கி வெடிகுண்டு சத்த பயிற்சி அளிக்கப்படுகிறது. மேற்கண்ட தகவலை தசரா விழா கமிட்டி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தசரா விழாவில் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலம் பீரங்கி குண்டுகள் முழக்கத்துடன் தொடங்கி வைக்கப்படும். இதில் வெடிகுண்டு சத்தம் கேட்டு தசரா யானைகள் மிரளாமல் இருக்க இந்த பயிற்சி அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.