< Back
பெங்களூரு
மைசூருவில் விமான சாகச நிகழ்ச்சி
பெங்களூரு

மைசூருவில் விமான சாகச நிகழ்ச்சி

தினத்தந்தி
|
23 Oct 2023 2:15 AM IST

மைசூரு தசரா விமான சாகச நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. வானில் சாகசம் நிகழ்த்திய உலோக பறவைகளை ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்து ரசித்தனர்.

மைசூரு:

ைமசூரு தசரா விமான சாகச நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. வானில் சாகசம் நிகழ்த்திய உலோக பறவைகளை ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்து ரசித்தனர்.

மைசூரு தசரா விழா

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா கடந்த 15-ந்தேதி தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. இதனால் மைசூருவில் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடங்கி நடந்து வருகிறது. மைசூரு அரண்மனை மற்றும் நகரில் பல பகுதிகளில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மைசூரு நகரமே மின்னொளியில் ஜொலிக்கிறது. இந்த நிலையில் தற்போது மைசூரு தசரா விழா இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த ஆண்டு தசரா விழாவையொட்டி விமான சாகச நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு மத்திய அரசும் அனுமதி வழங்கி இருந்தது. இதையடுத்து மைசூரு பன்னிமண்டபம் தீப்பந்து விளையாட்டு மைதானத்தில் சாகச நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் அங்கு விமான சாகச ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

விமான சாகச நிகழ்ச்சி

இந்த நிலையில் நேற்று பன்னிமண்டபம் தீப்பந்து விளையாட்டு மைதானத்தில் மைசூரு தசரா விமான சாகச நிகழ்ச்சி தொடங்கியது. நேற்று இந்த விமான சாகச நிகழ்ச்சியை காண மக்கள் இலவசமாக அனுமதிக்கப்பட்டனர். இதனால் ஏராளமான மக்கள் விமான சாகச நிகழ்ச்சியை காண தீப்பந்து விளையாட்டு மைதானத்தில் குவிந்தனர்.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான சூரியகிரண் என்ற போர் விமானங்கள் வானில் சாகசம் நிகழ்த்தின. வானில் புகையை கக்கியபடியும், பல்டி அடித்தும், குறுக்கும் நெடுக்குமாக சென்றும் மெய்சிலிர்க்கும் வகையில் விமானங்கள் சாகசம் செய்தன. வானில் சாகசம் நிகழ்த்திய உலோக பறவைகளை தீப்பந்து விளையாட்டு மைதானத்தில் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்து ரசித்தனர். மேலும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

மேலும் விமானப்படை வீரர்கள் பாராசூட்டில் பறந்து சாகசம் செய்தனர். அவர்கள் பாராசூட்டுடன் தீப்பந்து மைதானத்தில் வந்திறங்கினர். இந்த விமான சாகச நிகழ்ச்சி சுமார் ஒரு மணி நேரம் நடந்தது.

இன்றும் நடக்கிறது

இன்றும் (திங்கட்கிழமை) தீப்பந்து விளையாட்டு மைதானத்தில் விமான சாகச நிகழ்ச்சி நடக்க உள்ளது. இன்று சூரியகிரண் விமானங்கள், ராணுவ ஹெலிகாப்டர்கள் வானில் சாகசம் நிகழ்த்த உள்ளன. மேலும் பெங்களூரு மற்றும் தமிழ்நாடு கோவை விமான நிலையங்களில் இருந்து விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பறந்து வந்து சாகச நிகழ்ச்சி நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று விமான சாகச நிகழ்ச்சியை காண பொதுமக்கள் இலவசமாக அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று நடக்கும் சாகச நிகழ்ச்சியை காண தசரா விழா பாஸ் வாங்கியவர் களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வளர்ப்பு பிராணிகள் கண்காட்சி

இதேபோல் மைசூருவில் உள்ள ஜே.ேக. மைதானத்தில் வளர்ப்பு பிராணிகள் கண்காட்சியும் நடந்தது. இதில், ஏராளமானோா் தாங்கள் வளர்த்து வரும் நாய், பூனை, கிளி உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளுடன் கலந்துகொண்டனர். இதில் பொதுமக்களும் கலந்துகொண்டு பல்வேறு இன நாய்கள் மற்றும் பூனைகளை பார்த்து ரசித்தனர்.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற நாய்கள் மற்றும் பூனைகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் பங்கேற்ற அனைத்து பிராணிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஜம்பு சவாரி ஊர்வலம் ஒத்திகை

தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்புசவாரி ஊர்வலம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்க உள்ளது. இந்த ஊர்வலத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. மைசூரு அரண்மனை முன்பு மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பார்வையாளர்கள் யானை ஊர்லவம் மற்றும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பை காண இருக்கைகள் போடப்பட்டு வருகின்றன.

அத்துடன் ஜம்புசவாரி ஊர்வலம் நடக்கும் ராஜவீதியில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. அதாவது அரண்மனையில் இருந்து பன்னிமண்டபம் தீப்பந்து விளையாட்டு மைதானம் வரை 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை சுத்தம் செய்யப்பட்டதுடன், சாலையோரம் மக்கள் நின்று ஊர்வலத்தை பார்த்து ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று மைசூரு அரண்மனையில் ஜம்புசவாரி ஊர்வல ஒத்திகை நடந்தது. யானைகள் அரண்மனை முன்பு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டன. மேலும் போலீஸ் குழுவினரின் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சியை நிகழ்த்த உள்ள கலைஞர்களின் அணிவகுப்பு, குதிரைப்படையின் அணிவகுப்பு ஒத்திகை ஆகியவை நடந்தன. இதையொட்டி மைசூரு அரண்மனையில் போலீசார் மற்றும் அதிவிரைவு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்