முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மைசூரு வருகை மடாதிபதி கணபதி சச்சிதானந்தசுவாமியிடம் ஆசி பெற்றார்
|மைசூரு வந்த முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மடாதிபதி கணபதி சச்சிதானந்தசுவாமியிடம் ஆசி பெற்றார்.
மைசூரு:
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று மைசூருவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் மைசூரு மண்டகள்ளி விமான நிலையத்தை வந்தடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மைசூரு - ஊட்டி சாலையில் உள்ள கணபதி சச்சிதானந்தா ஆசிரமத்திற்கு சென்றார். அங்கு மடாதிபதி கணபதி சச்சிதானந்தசுவாமியை சந்தித்து ஆசி பெற்றார். மேலும் அங்கு நடந்த சிறப்பு யாகத்திலும் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், 'கோவில்களுக்கு சென்று பயபக்தியுடன் கடவுளை கும்பிட்டு, ஒழுக்கமாக நடந்து கொள்வதுதான் ஒரு பக்தனின் முக்கிய கடமை. அவ்வாறு செய்தாலே கஷ்டங்கள் அனைத்தும் காணாமல் போய்விடும்' என்று கூறினார். பின்னர் சச்சிதானந்தசுவாமியின் 80-வது பிறந்தநாளையொட்டி ஆசிரமம் சார்பில் மைசூரு செலுவாம்பா அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் ஒன்று வழங்கப்பட்டது. அந்த ஆம்புலன்சை ஆசிரமம் சார்பில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை செலுவாம்பா ஆஸ்பத்திரிக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மடாதிபதி கணபதி சச்சிதானந்த சுவாமி, மாவட்ட பொறுப்பு மந்திரி எஸ்.டி.சோமசேகர், எம்.எல்.ஏ.க்கள் நாகேந்திர, ராமதாஸ், மூடா தலைவர் ராஜீவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.