மும்பையில் இருந்து மங்களூருவுக்கு சரக்கு ரெயிலில் வந்த லாரியில் 'தீ'
|மும்பையில் இருந்து மங்களூருவுக்கு சரக்கு ரெயிலில் வந்த லாரியில் தீவிபத்து ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மங்களூரு-
மும்பையில் இருந்து மங்களூருவுக்கு சரக்கு ரெயிலில் வந்த லாரியில் தீவிபத்து ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சரக்கு ரெயில்
மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து தட்சிண கன்னடா மாவட்டம் சூரத்கல்லுக்கு லாரிகளை ஏற்றிக் கொண்டு ஒரு சரக்கு ரெயில் கடந்த 9-ந் தேதி புறப்பட்டது. நேற்று காலை அந்த சரக்கு ரெயில் பிஜூர் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது ரெயிலில் இருந்த ஒரு லாரியில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது.
அந்த தீ மளமளவென லாரி முழுவதும் பரவி எரிய ஆரம்பித்தது. இதுபற்றி அறிந்த என்ஜின் டிரைவர் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் உடனடியாக ரெயிலை நிறுத்தி அந்த லாரியில் பிடித்த தீயை அணைக்க முயன்றனர்.
பரபரப்பு
மேலும் இதுபற்றி பைந்தூர் தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து லாரியில் பிடித்த தீயை அணைத்தனர். பின்னர் இதுபற்றி பைந்தூர் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் லாரியில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்களில் இருந்து தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது. ஆனால் எப்படி தீப்பிடித்தது என்பது தெரியவில்லை.
இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தால் பிஜூர் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது .