கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும்-முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பேட்டி
|உட்கட்சி மோதல் காரணமாக காங்கிரஸ் அரசு கவிழ்வது உறுதி என்றும், கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் என்றும் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:-
ராமநகரில் உள்ள தனது பண்ணை வீட்டில் நடைபெற்ற ஜனதாதளம் (எஸ்) கட்சியின் கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பேசியதாவது:-
டி.கே.சிவக்குமாரே காரணம்
மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு எனது தலைமையில் நடைபெற்ற ஜனதாதளம் (எஸ்), காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்திருந்தது.
இதற்கு கனகபுரா பாறையான டி.கே.சிவக்குமாரே காரணம். அதற்கு நான் காரணம் இல்லை. எனக்கும், முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளிக்கும் இடையே சில கருத்து வேறுபாடு ஏற்பட்டது உண்மை தான். அதற்கு பின்னால் பெலகாவி டி.சி.சி. வங்கி தேர்தல் உள்ளது. அரசியல் காரணங்களுக்காக நான் பலிகாடாக்கப்பட்டேன்.
டி.கே.சிவக்குமார், பெலகாவி மாவட்ட அரசியலில் தலையிட்டது ஏன்?. என்னை நேர்மையாக காப்பாற்றுவதாகவும், கூட்டணி ஆட்சியை கவிழ விடாமல் தடுப்பதாகவும் முதலை கண்ணீர் விட்டார். நாங்கள் ஜோடி எருதுகள் என்று கூறினார். ஆனால் நடு ரோட்டில் மாட்டு வண்டியை மட்டும் விட்டு விட்டு டி.கே.சிவக்குமார் சென்று விட்டார். ஆட்சி கவிழ்ந்துவிட்டது.
திகார் சிறைக்கு செல்வார்
அடுத்த ஆண்டு (2024) கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுவது உறுதி. உட்கட்சி மோதல் காரணமாக காங்கிரஸ் அரசு கவிழ்வதும் உறுதி. எனது வாழ்க்கையில் என்றென்றும் டி.கே.சிவக்குமாருடன் உள் ஒப்பந்தம் செய்து கொண்டதில்லை. காங்கிரசுடன் கூட்டணி அமைத்து கொண்டு தற்போது வரை வேதனையை அனுபவித்து வருகிறேன். ஏற்கனவே டெல்லி திகார் சிறையை டி.கே.சிவக்குமார் பார்த்து வந்துவிட்டார். மற்றொரு முறை அவர் திகார் சிறைக்கு செல்வார். அதற்கான காலம் வெகுதூரம் இல்லை. விரைவில் நடக்கும். இந்த சட்டசபை தேர்தலில் 50 முதல் 60 தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம். நாடாளுமன்ற தேர்தலில் நிகிலுக்கு செய்த துரோகத்தை, காங்கிரசுக்கு நான் செய்யவில்லை.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.