தட்சிண கன்னடா, குடகில் மீண்டும் நிலநடுக்கம் சுவர்களில் விரிசல் ஏற்பட்டதால் மக்கள் பீதி
|தட்சிண கன்னடா, குடகு மாவட்டத்தில் பலபகுதிகளில் பயங்கர சத்தத்துடன் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுவர்களில் விரிசல் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
மங்களூரு:
சுவர்களில் விரிசல்
கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி மற்றும் மலைநாடு மாவட்டங்களான குடகு, சிவமொக்கா, ஹாசனில் பலபகுதிகளில் கடந்த மாதம் (ஜூலை) நிலநடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக சுள்ளியா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் நிலநடுக்கம் 3.8 என்ற அளவில் பதிவாகி இருந்தது. சிலபகுதிகளில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது.
மேலும், சில இடங்களில் சாலைகளில் பிளவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே நிலநடுக்கம் குறித்து கண்காணிக்க மத்திய குழு கர்நாடகம் விரைந்தது. அந்த குழு நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளை தீவிரமாக கண்காணித்தது.
அப்போது ரிக்டர் அளவில் 6-க்கும் மேல் பதிவானால் அது தீவிர நிலநடுக்கம் என்றும், தற்போது ஏற்பட்டது லேசானது எனவும்், யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் தேசிய பேரிடர் குழு அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்த நிலையில் தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கல்மாகரு மற்றும் கள்ளுகுந்தி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 6.30 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அப்போது வீடுகளில் இருந்து பாத்திரங்கள் சிதறி, விழுந்தன. செம்பு, அரன்தோடு பகுதிகளில் உள்ள வீட்டு சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பீதியில் உள்ளனர்.
மையமாக கொண்டு...
மெட்டகாஜி மற்றும் குலிக்கனா பகுதியை சேர்ந்தவர்கள் நிலநடுக்கத்தை அதிகமாக உணர்ந்ததாக கூறினர். நிலநடுக்கத்தின்போது பயங்கர சத்தம் கேட்டதாகவும், அந்த சத்தம் சுமார் 30 வினாடிகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த பகுதிமக்கள் கூறுகையில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மண்ணுக்கு அடியில் ஏற்பட்ட மாற்றத்தால் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கும் என கூறினர்.
நிலநடுக்கம் குறித்து அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். செம்பு, அரன்தோடு பகுதியை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.