< Back
பெங்களூரு
கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல்?: மந்திரி சுதாகர் பதில்
பெங்களூரு

கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல்?: மந்திரி சுதாகர் பதில்

தினத்தந்தி
|
31 July 2022 10:46 PM IST

கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடக்குமா என்ற கேள்விக்கு மந்திரி சுதாகர் பதில் அளித்துள்ளார்.

கோலார் தங்கவயல்:

ஜல்ஜீவன் தொடக்க விழா

சிக்பள்ளாப்பூர் தாலுகா லெக்கநாயக்கனஹள்ளி அருகே ராயப்பனஹள்ளி கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டப்பணிகள் தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் மாநில சுகாதாரத்துறை மந்திரியும், சிக்பள்ளாப்பூர் மாவட்ட பொறுப்பு மந்திரியுமான சுதாகர் கலந்துகொண்டு ஜலஜீவன் திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.

இதைதொடர்ந்து அவர் பேசுகையில், 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடு இல்லாதோருக்கு அரசு சார்பில் இலவச வீடுகள் கட்டிக்கொடுக்கும் திட்டத்தை கர்நாடக அரசு நிறைவேற்ற உத்தரவிட்டது. அந்த வகையில் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் வீடு இல்லாதோருக்கு வீடுகள் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் 10 ஆயிரம் வீடுகளும், நகர்ப்பகுதிகளில் 5 ஆயிரம் வீடுகளை தக்க பயனாளிகளுக்கு கட்டிக்கொடுக்கப்படும். இந்த வீடுகளை கட்டி, பயனாளிகளுக்கு இந்தாண்டு டிசம்பர் மாதத்திற்குள் வழங்கப்படும் என்றார்.

முன்கூட்டியே தேர்தல்?

முன்னதாக மந்திரி சுதாகர், சிக்பள்ளாப்பூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடப்பது வழக்கம். ஆனால், அரசியல் சூழ்நிலைக்காரணமாக முன்கூட்டியே கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன். மாநிலத்தில் மக்கள் எதிர்பார்த்ததை விட அரசு அதிகப்படியாக வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளது. எனவே, கர்நாடக சட்டப்பேரவைக்காக தேர்தல் எப்போது வந்தாலம் அதை எதிர்கொள்ள பா.ஜனதா தயாராக உள்ளது.

இளைஞர்களுக்கு வாய்ப்பு

தற்போது கர்நாடகவில் பா.ஜனதா அரசு மேற்கொண்டுள்ள வளர்ச்சிப் பணிகளை பார்க்கும் போது வரும் சட்டப் பேரவை பொதுத்தேர்தலில் பா.ஜனதா அரசு பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. வரும் சட்டப்பேரவை தேர்தலில் பெருவாரியாக இளைய தலைமுறையினர் தேர்தலில் போட்டியிட கட்சி மேலிடம் டிக்கெட் வழங்கும் என்று எதிர்பார்க்கிறேன். சமூக சிந்தனை கெ்ாண்ட இளைஞர்கள் அதிக அளவில் தேர்தலில் போட்டியிட முன்வரவேண்டும் என்று பா.ஜனதா அரசு விரும்புகிறது.

வருங்கால இந்தியா

வருங்கால இந்தியா என்பது இன்றைய இளைஞர்களின் கையில் இருப்பதால் இளைஞர்கள் பெரும் அளவில் தேர்தலில்போட்டியிட பா.ஜனதாவில் சேரவேண்டும் என்பதே ஒட்டு மொத்த பா.ஜனதா கட்சியின் விருப்பமாகும். எனவே தான் பா.ஜனதா கட்சி அரசியலில் இருந்து ஓய்வு பெறும் வயதை 75 வயதாக குறைத்துள்ளது.

கட்சியின் வளர்ச்சி்க்காக பாடுபட்டவர்கள் எத்தகைய பிரமுகர்களாக இருந்தாலும் அவர்கள் ஓரம் கட்டிவிட்டு இளைய சமுதாயத்தினருக்கு விட்டுக்கொடுக்க வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. அந்த வகையில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க பா.ஜனதா கட்சியில் பல முன்னணி தலைவர்கள் தயாராக உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்