கவுரிபிதனூர் அருகே வரதட்சணை கொடுமையால்: தூக்குப்போட்டு பெண் தற்கொலை-கணவர் கைது
|கவுரிபிதனூர் அருகே வரதட்சணை கொடுமையால் தூக்குப்போட்டு பெண் ஒருவர் தற்கொலை செய்துெகாண்டார். இதுதொடர்பாக அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.
கோலார் தங்கவயல்:
வரதட்சணை கொடுமை
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபிதனூர் தாலுகா டி.பாள்யா கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி. இவருக்கும், தொட்டபள்ளாப்பூர் தாலுகா சென்னபுரா கிராமத்தை சேர்ந்த அனிதா (வயது 24) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது அனிதாவின் பெற்றோர் சுப்ரமணி குடும்பத்தார் வரதட்சனையாக கேட்ட பணம்-நகைகளை கொடுத்ததாக கூறப்படுகிறது. திருமணம் முடிந்த நாள் முதல் சுப்ரமணி வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். வேலைக்கு செல்லாததால் வரதட்சணையாக கொடுத்த நகை-பணத்தை அடகு வைத்து செலவு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக சுப்ரமணி அனிதாவை பிறந்த வீட்டில் இருந்து வரதட்சணை வாங்கி வரும்படி கட்டாயப்படுத்தி துன்புறுத்தி உள்ளார். அனிதா வேறு வழியின்றி பெற்றோரிடம் இருந்து மேலும் பணம்-தங்கநகைகளை வாங்கி வந்து கணவன் சுப்ரமணியிடம் கொடுத்துள்ளார். அதையும் செலவு செய்த சுப்ரமணி தொடர்ந்து மனைவியிடம் மேலும் வரதட்சணை வாங்கி வரும்படி கட்டாயப்படுத்தி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
தற்கொலை
இந்த நிலையில் நேற்று அனிதா தனது பிறந்த வீட்டிற்கு வந்தார். பின்னர்,வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டிற்கு பெற்றோர் வந்ததும் தங்களது மகள் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் குறித்து அனிதாவின் பெற்றோர் கவுரிபிதனூர் புறநகர் போலீசில் புகார் அளித்தனர்.
கணவர் கைது
மேலும் தனது மகளின் சாவுக்கு அவரது கணவன் சுப்ரமணி தான் காரணம் என்று கூறி புகார் மனுவை அளித்தனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த கவுரிபிதனூர் புறநகர் போலீசார் சுப்ரமணியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.