< Back
பெங்களூரு
எரகோல் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகித்து சோதனை
பெங்களூரு

எரகோல் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகித்து சோதனை

தினத்தந்தி
|
20 Oct 2023 6:45 PM GMT

பங்காருபேட்டை உள்ளிட்ட 3 தாலுகாக்களில் எரகோல் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கோலார் தங்கவயல்:

பங்காருபேட்டை உள்ளிட்ட 3 தாலுகாக்களில் எரகோல் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தடுப்பணை மூலம்...

கோலார் மாவட்டத்தில் உள்ள பங்காருபேட்டை, மாலூர், கோலார் ஆகிய தாலுகாக்களுக்கு எரகோல் குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டது. அதாவது எரகோல் கிராமம் வழியாக தமிழகத்திற்கு செல்லும் உபரி நீரை தடுப்பணை மூலம் தடுத்து நிறுத்தி, அதை சுத்திரிகரித்து பங்காருபேட்டை உள்ளிட்ட 3 தாலுகாவில் வசிக்கும் மக்களுக்கும் வினியோகிப்பது தான் எரகோல் திட்டம் ஆகும்.

இந்த திட்டம் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி காலத்தில் தொடங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த திட்ட பணிகள் நடந்து வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிறைவுபெற்றது.

எரகோல் திட்டம்

கடந்த பா.ஜனதா ஆட்சியில் இந்த திட்டத்தை தொடங்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் அது தடைப்பட்டு வந்தது. தற்போது காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் எரகோல் திட்டத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி அடுத்த மாதம்(நவம்பர்) 10-ந் தேதி எரகோல் அணையில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பங்காருபேட்டை உள்ளிட்ட 3 தாலுகாக்களுக்கும் வினியோகம் செய்யும் பணி தொடங்கப்படும் என்றும், முதல்-மந்திரி சித்தராமையா இந்த திட்டத்தை தொடங்கி வைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் எரகோல் அணையில் இருந்து பங்காருபேட்டை உள்ளிட்ட 3 தாலுகாக்களுக்கும் குடிநீர் வினியோகித்து சோதனை செய்யும் பணி நேற்று நடந்தது. இந்த சோதனையை அதிகாரிகள் நடத்தினர். அப்போது எரகோல் அணையில் இருந்து திறக்கப்பட்ட குடிநீர் பங்காருபேட்டை உள்ளிட்ட 3 தாலுகாக்களுக்கும் வந்து சேர்ந்தது. குழாய்களில் தண்ணீர் வந்ததை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து குடங்களில் பிடித்துக் கொண்டனர். வருகிற 10-ந் தேதி வரை இந்த தண்ணீரை பொதுமக்கள் குடிக்கவோ, சமையலுக்கு பயன்படுத்தவோ வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

குடிநீர் வினியோகம்

எரகோல் குடிநீர் திட்டத்தின் மூலம் கோலார், மாலூர், பங்காருபேட்டை ஆகிய தாலுகாக்களில் உள்ள 22 கிராமங்கள், பஞ்சாயத்து, நகரசபைகள் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

---------------------------------

மேலும் செய்திகள்