< Back
பெங்களூரு
மண்டியாவில் விவசாயிகளுடன் டாக்டர்கள் போராட்டம்
பெங்களூரு

மண்டியாவில் விவசாயிகளுடன் டாக்டர்கள் போராட்டம்

தினத்தந்தி
|
14 Oct 2023 3:07 AM IST

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டியாவில் விவசாயிகளுடன் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மண்டியா:-

தென்மேற்கு பருவமழை

கர்நாடகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டது. இருப்பினும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்பேரில் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டு வருகிறது. அதன்படி நேற்றும் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதற்கிடையே காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. இதில் ஒழுங்காற்று குழு பரிந்துரையின் படி தமிழகத்திற்கு வருகிற 16-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை 15 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்க அந்த கூட்டத்தில் கர்நாடகத்திற்கு உத்தரவிடப்பட்டது. இதற்கு கர்நாடகம் ஆட்சேபனை தெரிவித்தது.

இந்த நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதை கண்டித்தும், காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவை கண்டித்தும் மண்டியாவில் நேற்றும் விவசாய சங்கத்தினர், கன்னட அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

40-வது நாளாக போராட்டம்

மண்டியா டவுனில் சர் எம்.விசுவேஸ்வரய்யா சிலை அருகே தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கத்தினர் கடந்த 39 நாட்களாக தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 40-வது நாளாக அவர்களது போராட்டம் தொடர்ந்து நடந்தது. அப்போது அவர்கள் காவிரி மேலாண்மை ஆணையத்து எதிராக கோஷம் எழுப்பினர். மேலும் அந்த அமைப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுபோல் மாவட்ட விவசாய சங்கத்தினர் சர் எம்.விசுவேஸ்வரய்யா சிலை அருகே சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றை ரத்து செய்யக்கோரி கோஷமிட்டனர். இந்த போராட்டத்தில் தலித் அமைப்பினர், பல்வேறு விவசாய சங்கத்தினர், கன்னட அமைப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரசு செவி சாய்க்கவில்லை

போராட்டத்தின்போது கடந்த 40 நாட்களாக காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் எங்களது கோரிகைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை.

மாநில அளவில் முழுஅடைப்பு போராட்டம் நடத்தியும் அரசு, விவசாயிகள் நலனை கண்டுகொள்ளவில்லை. இது சரியல்ல. கர்நாடக மாநில அரசு உடனடியாக தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பை நிறுத்த வேண்டும். இல்லையேல் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று கோஷமிட்டனர்.

தண்ணீர் விடுவது சரியல்ல

இதுபோல் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நேற்று பாரத டாக்டர்கள் சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் டாக்டர் ஜெகதீஷ் பேசுகையில், 'கர்நாடக மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடாக உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது சரியல்ல.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் இந்த போராட்டம் நடக்கிறது. தமிழ்நாட்டுக்கு தற்போது 3-வது முறையாக தண்ணீர் திறந்துவிட்டுள்ளனர். ஆனால் கர்நாடகத்தில் விலங்குகள், பறவைகளுக்கு கூட தண்ணீர் இல்லாத நிலை உள்ளது. அதனால் உடனடியாக தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பை நிறுத்த வேண்டும்' என்றார்.

கர்நாடக சேனா படை

இதுபோல் சாம்ராஜ்நகர் (மாவட்டம்) டவுனில் உள்ள சாமராஜேஸ்வரா கோவில் முன்பும், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக சேனா படை எனும் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றை ரத்து செய்யக்கோரி கோஷம் எழுப்பினர்.

மேலும் செய்திகள்