டி.கே.சிவக்குமார்-சித்தராமையா ஒற்றுமையாக இருப்பது போல் நடிக்கின்றனர்: மந்திரி ஆர்.அசோக் பேட்டி
|டி.கே.சிவக்குமார்-சித்தராமையாவும் ஒற்றுமையாக இருப்பதுபோல் நடிக்கின்றனர் என்று மந்திரி ஆர்.அசோக் தெரிவித்துள்ளார்.
ஹாசன்:
மந்திரி ஆர்.அசோக்
ஹாசன் மாவட்டம் சரவணபெலகோலாவில் உள்ள கோமதேஸ்வரர் சிலை சுற்றுசுவர் இடிந்து விழுந்த இடத்தை வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் நேரில் சென்று நேற்று பார்வையிட்டார். இதைதொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஹாசனில் மழை வெள்ளம் பாதித்த இடங்களில் மீ்ட்பு பணிகள் நடந்து வருகிறது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு சார்பில் ரூ.10 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கப்படும்.
இதற்கான நடவடிக்கை 4 நாட்களில் தொடங்கப்படும். மேலும் மழை பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு இலவச உணவு பொருட்கள் வழங்கப்படும். அமித்ஷா, பசவராஜ் பொம்மை சந்திப்பு குறித்து சிலர் சர்ச்சையை கிளப்புகின்றனர். மழை வெள்ளபாதிப்பு குறித்துதான் அவர்கள் ஆலோசனை நடத்தினர். அரசியல் குறித்து எந்த ஆலோசனையும் நடத்தவில்லை.
பா.ஜனதா ஆட்சி மீண்டும் அமையும்
கர்நாடகத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கும். சித்தராமையாவின் பிறந்த நாள் விழா குறித்து பேச விரும்பவில்லை. ஏனென்றால் அந்த விழா பா.ஜனதாவிற்கு சாதகமானது. டி.கே சிவக்குமார், சித்தராமையாவின் கருத்து மோதல் கட்சி தலைமை வரைக்கு சென்றுவிட்டது.
ஆனால் மேடையில் 2 பேரும் கட்டி தழுவி கொண்டு ஒற்றுமையாக இருப்பது போன்று நடிக்கின்றனர். டி.கே.சிவக்குமாருடன், குமாரசாமி நெருக்கமாக சேர்ந்து கட்டி தழுவி கை உயர்த்தி காண்பித்தார். ஆனால் அந்த ஒற்றுமை நிலைக்கவில்லை. குமாரசாமி முதல்-மந்திரி பதவியை இழந்து தெருவிற்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டது. சித்தராமையாவிற்கும் அதே நிலைதான். டி.கே சிவக்குமார் யாரையெல்லாம் கட்டி தழுவி கையை உயர்த்துகிறாரோ அவர்கள் எல்லாம் தெருவிற்கு வந்துவிடுவார்கள். இதனை பா.ஜனதா சாதகமாக பயன்படுத்தி கொள்ளும். சட்டசபை தேர்தலில், காங்கிரசின் பகல் கனவு பழிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் மண்டியாவுக்கு சென்ற மந்திரி ஆர்.அசோக், மழை பாதித்த இடங்களை பார்வையிட்டார். அப்போது அவர், அதிகாரிகளிடம் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு மாதத்தில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.