தேவேகவுடாவிடம் பீஷ்மரின் சக்தி உள்ளது- குமாரசாமி பேட்டி
|தேவேகவுடாவிடம் பீஷ்மரின் சக்தி உள்ளதாக குமாரசாமி கூறியுள்ளது.
பெங்களூரு:
பீஷ்மரின் சக்தி
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் உள்ள ஜனதாதளம் (எஸ்) கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
முன்னாள் பிரதமர் தேவேகவுடா குறித்து காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜண்ணா சர்ச்சை கருத்தை கூறியுள்ளார். யாரோ தேவேகவுடாவை பற்றி கூறுவதால் அவருக்கு ஒன்றும் ஆகி விடாது. அவரிடம் பீஷ்மரின் சக்தி உள்ளது. இதனை நான் அருகில் இருந்து கவனித்து வருகிறேன். தேவேகவுடா குறித்து சித்தராமையாவின் குழுவை சேர்ந்தவர்கள் அதிகம் பேசி வருகின்றனர்.
இதுபோல ராஜண்ணாவும் மேடையில் பேசும் போது தேவேகவுடா பற்றி கூறிவிட்டார். இன்னொரு முறை மேடையில் பேசும்போது ராஜண்ணா எச்சரிக்கையுடன் பேச வேண்டும். அடுத்த சட்டசபை தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சியை ஆட்சிக்கு கொண்டு வர தேவேகவுடா கடுமையாக உழைத்து வருகிறார். தேவேகவுடா சாதனையின் சிகரம். சித்தராமையாவின் வளர்ச்சிக்கு ஜனதாதளம் (எஸ்) கட்சி தான் காரணம்.
எடியூரப்பாவுக்கு நன்றி
எனக்கு சித்தராமையா மீதோ, காங்கிரஸ் மீதோ கோபம் இல்லை. கடந்த 2 மாதங்களாக நான் அவர்களை பற்றி பேசவும் இல்லை. சித்தராமையாவின் 75-வது பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடுவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. அடுத்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 60 முதல் 65 இடங்களில் தான் வெற்றி பெறும். 2013-ம் ஆண்டு எடியூரப்பா தனிக்கட்சி தொடங்கியதால் தான் சித்தராமையா வெற்றி பெற்றார்.
முதல்-மந்திரி ஆனதற்காக எடியூரப்பாவுக்கு, சித்தராமையா நன்றி சொல்ல வேண்டும். நாங்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். இதற்கு மக்கள் ஆசீர்வாதம் உள்ளது. பெங்களூரு வளர்ச்சிக்காக நான் எதுவும் செய்யவில்லை என்று பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். 2008 முதல் 2013 வரை மாநிலத்தில் பா.ஜனதா தான் ஆட்சியில் இருந்தது.
கொள்ளை நடக்கிறது
2013 முதல் 2018 வரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. நான் 2018 முதல் 2019 வரை கூட்டணி கட்சி முதல்-மந்திரியாக இருந்தேன். நான் முதல்-மந்திரியாக இருந்த போது பெங்களூருவில் 5 சாட்டிலைட் நகரங்களை உருவாக்க நடவடிக்கை எடுத்தேன். முதல்-மந்திரியின் நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் பெங்களூரு வளர்ச்சிக்கு ரூ.9 ஆயிரம் கோடி ஒதுக்கி இருந்தேன்.
அதில் ரூ.4 ஆயிரம் கோடியை நிறுத்தி வைத்து உள்ளனர். காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளால் தான் பெங்களூருவின் வளர்ச்சி தடைப்பட்டு உள்ளது. மாநகராட்சி அலுவலகத்திற்கு தீ வைத்தது யார் என்று முதல்-மந்திரி கூறுவாரா?. வளர்ச்சி என்ற பெயரில் தற்போது கொள்ளை தான் நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.