கர்நாடகத்தில் மழை பற்றாக்குறையால் மின் உற்பத்தி பாதிப்பு
|கர்நாடகத்தில் மழை பற்றாக்குறையால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் மழை பற்றாக்குறையால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியாவது:-
அறிவுப்பூர்வமான கருத்து
வாரிய தலைவர்கள், உறுப்பினர்கள் நியமனம் விரைவில் மேற்கொள்ளப்படும். இதுகுறித்து முதல்-மந்திரி சித்தராமையாவுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ராஜஸ்தான் தேர்தலில் பரபரப்பாக உள்ளார். அதனால் அவருடன் ஆலோசனை நடத்த முடியவில்லை. கர்நாடக மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து ஆட்சி அதிகாரத்தை கொடுத்துள்ளனர். நாங்கள் நல்லாட்சி நிா்வாகத்தை நடத்தி வருகிறோம். மின்சாரத்தை கொள்முதல் செய்ய நாங்கள் செயற்கையான மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இருப்பதாக சிலர் குற்றம்சாட்டியுள்ளனர். இத்தகைய அறிவுப்பூர்வமான கருத்தை கூறியது யார் என்பது எனக்கு தெரியவில்லை. நாங்கள் மக்களை காப்பாற்றுகிறோம். தொழில் நிறுவனங்கள் பாதிக்காத வகையில் மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.
மின்துறைக்கு உத்தரவு
200-க்கும் மேற்பட்ட தாலுகாக்களில் வறட்சி நிலவுகிறது. மழை பற்றாக்குறையால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு குறைந்தது 5 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்று மின்துறைக்கு உத்தரவிட்டுள்ளோம். எதிர்க்கட்சிகள் என்ன வேண்டுமானாலும் விமர்சனம் செய்யட்டும். விமர்சனங்கள் செத்துவிடும். செயல்கள் மட்டுமே நிலைத்து நிற்கும்.
உத்தரவாத திட்டங்களை செயல்படுத்த முடியாது என்று எதிர்க்கட்சிகள் கூறின. ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த திட்டங்களை செயல்படுத்தி காட்டியுள்ளோம். நாங்கள் எங்களது பணிகளை செய்து கொண்டு வருகிறோம். எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து கொண்டே இருக்கின்றன. ஒட்டுமொத்த தேசமும் கர்நாடகத்தை திரும்பி பார்க்கிறது.
சட்டசபை தேர்தல்
வேலை வாய்ப்புகளை பெருக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். சட்டசபை தேர்தல் முடிவடைந்து 5 மாதங்கள் ஆகியும் எதிர்க்கட்சி தலைவரை பா.ஜனதா நியமிக்கவில்லை. இதன் மூலம் அக்கட்சி எந்த அளவுக்கு பலவீனமாக உள்ளது என்பது தெரிகிறது.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.