பந்திப்பூர், பிளிகிரிரங்கணபெட்டா வனப்பகுதியை விரிவுபடுத்த முடிவு-வனத்துறை அதிகாரி தகவல்
|மனித-விலங்குகள் மோதலை தடுக்க பந்திப்பூர், பிளிகிரிரங்கணபெட்டா வனப்பகுதியை விரிவுபடுத்த வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
கொள்ளேகால்:
சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் பந்திப்பூர் மற்றும் பிளிகிரிரங்கணபெட்டா பகுதிகள் தேசிய புலிகள் பாதுகாப்பு சரணலாயமாக உள்ளது. இந்த வனப்பகுதியையொட்டி கிராமங்களில் புலிகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாகவும், பொதுமக்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இதனால் புலிகள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி கிராம மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் புலிகள் மற்றும் மனிதர்களுக்கு இடையேயான மோதலை தடுக்க வனப்பகுதியை விரிவுப்படுத்த வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி சந்தோஷ் குமார் கூறுகையில், பந்திப்பூர் வனப்பகுதியில் 126 புலிகள் மற்றும் பிளிகிரிரங்கணபெட்டா பகுதியில் 49 புலிகள் உள்ளது. இந்த புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுமக்களுக்கும் அதிகளவு பாதிப்பு ஏற்பட கூடும். எனவே இந்த பாதிப்பை தடுக்கவும், புலிகளின் உணவு தேவைகளை நிவர்த்தி செய்யவும் பந்திப்பூர், பிளிகிரிரங்கணபெட்டா வனப்பகுதியை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சர்வே பணிகள் விரைவில் நடைபெறும் என்றார்.