சிவமொக்கா மாவட்டத்தில் தொடர் கனமழை: வீடு இடிந்து பெண் பலி
|சிவமொக்கா மாவட்டத்தில் தொடர் கனமழையால் வீடு இடிந்து பெண் பலியானார். மேலும் கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டு உள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளன.
சிவமொக்கா:-
கனமழை
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை வரலாறு காணாத அளவில் பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் ஓடும் ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதுபோல் சிவமொக்கா மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. நேற்று சிவமொக்கா மாவட்டத்தில் கனமழை கொட்டியது.
இதனால் பத்ராவதி தாலுகா காச்சிகொண்டனஹள்ளி கிராமத்தில் ஒரு வீடு இடிந்து சுஜாதா(வயது 55) என்ற பெண் பலியானார். கிருஷ்ணமூர்த்தி என்பவர் படுகாயம் அடைந்தார். இதுவரை இந்த தொடர் கனமழைக்கு சிவமொக்கா மாவட்டத்தில் 5 பேர் உயிரிழந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்து துண்டிப்பு
கனமழையால் பத்ரா அணை நிரம்பிவிட்டது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 41 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதால் பத்ராவதி டவுனில் உள்ள பழைய பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதுபோல் சிவமொக்கா டவுனில் ஓடும் துங்கா ஆற்றிலும் காட்டாற்று வெள்ளம் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் அங்கு கரையோரம் உள்ள மண்டபம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. சாகர் தாலுகாவில் உள்ள மாதேஸ்வரா மற்றும் சொரப் தாலுகாவில் உள்ள பெரியகுப்பே பகுதிகளுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.
மஞ்சள் 'அலர்ட்' எச்சரிக்கை
அந்த கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஏராளமான சாலைகள் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கின்றன.
சிவமொக்கா மாவட்டத்தில் இன்னும் 5 நாட்கள் மழை பெய்யும் என்றும், மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுத்தும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தொடர் கனமழையால் சிவமொக்கா மாவட்ட மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.