< Back
பெங்களூரு
சித்தராமோத்சவா விழா முன்னேற்பாடுகள் கூட்டத்தை:  காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் புறக்கணித்தார்
பெங்களூரு

சித்தராமோத்சவா விழா முன்னேற்பாடுகள் கூட்டத்தை: காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் புறக்கணித்தார்

தினத்தந்தி
|
13 July 2022 10:44 PM IST

சித்தராமோத்சவா விழா முன்னேற்பாடுகள் கூட்டத்தை மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் புறக்கணித்தார்.

பெங்களூரு:

முன்னேற்பாடுகள் கூட்டம்

முன்னாள் முதல்-மந்திரியும், கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையாவின் 75-வது பிறந்த நாளை அவரது ஆதரவாளர்கள் சித்தராமோத்சவா என்ற பெயரில் பிரமாண்டமாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். இந்த விழா வருகிற ஆகஸ்டு மாதம் 3-ந் தேதி தாவணகெரேயில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விழா முன்னேற்பாடுகள் தொடர்பாக அந்த நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஆர்.வி.தேஷ்பாண்டே, எம்.பி.பட்டீல் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் டி.கே.சுரேஷ் எம்.பி. பேசும்போது கூறியதாவது:-

தலைவர்கள் அதிருப்தி

சுதந்திர தின பவள விழா மற்றும் சித்தராமோத்சவா ஆகிய இரண்டையும் ஒன்றாக கொண்டாடுவது நல்லது என்பது தனிப்பட்ட கருத்து. எனக்கு விரும்பம் இருக்கிறதோ இல்லையோ, சித்தராமோத்சவா என்ற பெயரில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதை நிராகரிப்பதால் எந்த பயனும் இல்லை. இதை நான் ஏற்று கொண்டு, சுதந்திர தின பவள விழாவையும் இதனுடன் சேர்த்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். தலைவர்களின் பிறந்த நாளை கொண்டாடுகிறோம் என்றால் அதை பெருமையுடன் கூறிக்கொள்ளலாம்.

இது ஒருவரை முன்னிலைப்படுத்தும் விழா அல்ல. இது காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் நிகழ்ச்சி. சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் எந்த பிரச்சினையும் வராமல் பார்த்து கொள்ள வேண்டும். தொண்டர்களுக்கு தவறான தகவல் செல்லும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற கூடாது

இவ்வாறு அவர் கூறினார்.

சித்தராமோத்சவா விழாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் பேசியதால் கூட்டத்தில் இருந்த தலைவர்கள் சற்று அதிருப்தி அடைந்தனர்.

அழைப்பு விடுக்கவில்லை

இந்த கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் புறக்கணித்துவிட்டார். இதுகுறித்து விளக்கம் அளித்த அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பி.எல்.சங்கர், "சித்தராமோத்சவா விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதே டி.கே.சிவக்குமார் தான். அதனால் நாங்கள் அவரை இந்த கூட்டத்திற்கு அழைக்கவில்லை. சித்தராமையாவுக்கும் அழைப்பு விடுக்கவில்லை. அதனால் டி.கே.சிவக்குமார் புறக்கணித்தார் என்று சொல்வது தவறு" என்றார்.

மேலும் செய்திகள்