< Back
பெங்களூரு
விஷம் குடித்த கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி சாவு
பெங்களூரு

விஷம் குடித்த கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி சாவு

தினத்தந்தி
|
14 Oct 2023 3:14 AM IST

காதலன் வேறொரு பெண்ணுடன் சுற்றியதால் விஷம் குடித்த கல்லூரி மாணவி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பலியானார். இதையடுத்து அவரை அவருடைய காதலன் தற்கொலைக்கு தூண்டியதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

ஹாசன்:-

கல்லூரி மாணவி

ஹாசன் (மாவட்டம்) தாலுகா பெலோட்டே கிராமத்தைச் சேர்ந்தவர் ராமய்யா. இவரது மகள் ஆஷா(வயது 20). இவர் மண்டியா டவுனில் உள்ள ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். இந்த நிலையில் இவருக்கும், அதே கல்லூரியில் படித்து வரும் ஆளூர் தாலுகா தொட்டகனகாலு கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுநாதா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

பின்னர் அந்த பழக்கம் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். அப்போது இருவரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறி பேசி வந்துள்ளனர். வீடியோ கால் மூலமாகவும் பேசி வந்துள்ளனர். மேலும் தனது காதலன் கேட்டபோதெல்லாம் ஆஷா தன்னுடைய தனிப்பட்ட புகைப்படங்களையும் வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி இருக்கிறார். அதுமட்டுமின்றி பல்வேறு இடங்களுக்கும் சுற்றித்திரிந்துள்ளனர்.

விஷம் குடித்தார்

இந்த நிலையில் மஞ்சுநாதா, வேறொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்துள்ளார். இதுபற்றி அறிந்த ஆஷா தனது காதலன் மஞ்சுநாதாவிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த மஞ்சுநாதா, ஆஷாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் தன்னிடம் தகராறில் ஈடுபட்டால் உனது தனிப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்றும் கூறி மிரட்டி இருக்கிறார். இதனால் பயந்து போன ஆஷா மனமுடைந்து காணப்பட்டார்.

கடந்த 6-ந் தேதி ஆஷா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று ஆஷா பலியானார்.

சோகம்

இதையடுத்து ஆஷாவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலன் மஞ்சுநாதா மீது ஹாசன் புறநகர் போலீசில் ஆஷாவின் தந்தை ராமய்யா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்