< Back
பெங்களூரு
கூட்டுறவு வங்கி தேர்தல் முன்விரோதத்தில் கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை
பெங்களூரு

கூட்டுறவு வங்கி தேர்தல் முன்விரோதத்தில் கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை

தினத்தந்தி
|
29 May 2022 3:43 PM GMT

கூட்டுறவு வங்கி தேர்தல் முன்விரோதத்தில் கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து சாம்ராஜ்நகர் கோர்ட்டு தீர்ப்பளித்து உத்தரவிட்டது.

கொள்ளேகால்:

தேர்தல் முன்விரோதத்தில் கொலை

சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா மாவட்ட கூட்டுறவு வங்கிக்கான தேர்தல் கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்றது. இந்த தேர்தல் விவகாரம் தொடர்பாக மாதள்ளி கிராமத்தை சேர்ந்த சென்னபசப்பா மற்றும் பிரகாஷ் என்ற வாலிபர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் சென்னபசப்பாவை கொலை செய்ய பிரகாஷ் முடிவு செய்தார்.அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி 15-ந் தேதி பிரகாஷ் அரிவாளுடன் சென்னபசப்பா வீட்டிற்கு சென்று அவரை சரமாரியாக வெட்டினார்.

ஆயுள் தண்டனை

இதைபார்த்த அதே கிராமத்தை சேர்ந்த சிவநாகப்பா மற்றும் பசவண்ணா ஆகிய 2 பேரும் பிரகாசை தடுக்க முயன்றனர். அப்போது பிரகாஷ் அரிவாளால் அவர்களையும் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த 3 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சென்னபசப்பா உயிரிழந்தார். இதுகுறித்து பேகூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர்.

மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த பசப்பா, சங்கர், மகாதேவப்பா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை சாம்ராஜ்நகர் மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கை விசாரணை நடத்தி நீதிபதி தீர்ப்பு கூறினார். அதில் தேர்தல் முன்விரோதத்தில் சென்னபசப்பாவை கொன்ற பிரகாசுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் கொலை சம்பவத்தில் பிரகாசுக்கு உடந்தையாக இருந்த பசப்பா, சங்கர், மகாதேவப்பா ஆகிய 3 பேருக்கு தலா 3 மாத சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தனது தீர்ப்பில் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்