< Back
பெங்களூரு
ஓட்டல், மருந்தகத்தில் புகுந்து ரூ.10 ஆயிரம் திருட்டு-தூய்மை பணியாளர் கைது
பெங்களூரு

ஓட்டல், மருந்தகத்தில் புகுந்து ரூ.10 ஆயிரம் திருட்டு-தூய்மை பணியாளர் கைது

தினத்தந்தி
|
14 Aug 2022 5:34 PM GMT

ஓட்டல், மருந்தகத்தில் புகுந்து ரூ.10 ஆயிரம் திருடிய தூய்மை பணியாளர் கைது செய்யப்பட்டார்.

மங்களூரு:

ஓட்டலுக்குள் புகுந்து...

தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா கரயா கிராமத்தில் கல்லேரி மாா்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட் பகுதியில் வங்கி ஒன்று உள்ளது. இந்த வங்கியை நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு ஊழியர்கள் பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றனர். இந்த நிலையில் இரவு அந்த வங்கிக்குள் மர்மநபர் ஒருவர் புகுந்துள்ளார். அவர் வங்கியின் முன்பக்க கதவை உடைக்க முயன்றார்.

அந்த முயற்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து அவர் வங்கியில் கொள்ளை அடிக்கும் முயற்சியை கைவிட்டார். அடுத்ததாக அவர் அந்த பகுதியில் இருந்த ஓட்டலுக்குள் புகுந்தார். உள்ளே நுழைந்த அவர் அங்கிருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கத்தை திருடிவிட்டு வெளியே வந்தார்.

பின்னர், அவர் அந்த பகுதியில் இருந்த மருந்தகத்திற்குள் நுழைந்து ரூ.5 ஆயிரத்தை திருடினார். மேலும் கண்காணிப்பு கேமரா கேபிள்களை அறுக்க முயன்றார். அப்ேபாது அருகில் இருந்த கதவில் அவரது தலை மோதியது. இதில் அவரது தலையில் இருந்து ரத்தம் வெளியேற ஆரம்பித்தது.

தூய்மை பணியாளர்

இதையடுத்து அங்கிருந்து அவர் தப்பித்து சென்றார். மறுநாள் காலையில் அந்த ஓட்டல், மருந்துகடை உரிமையாளர்கள் கொடுத்த புகாரின்பேரில் பெல்தங்கடி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அப்போது திருட்டில் ஈடுபட்டதாக கடபா தாலுகா சாந்திபெட்டு கிராமத்தை சேர்ந்த அப்துல் காதர் (வயது 37) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவர் தண்ணீர்பந்தல் கிராம பஞ்சாயத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், ஓட்டல், மருந்தகத்தில் திருடியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் வங்கி கதவை உடைத்து கொள்ளை அடிக்க முயன்றதாகவும் அவர்மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்