மைசூருவில் 2 கல்லூரிகள் மாணவர்கள் இடையே மோதல்-போலீசார் விசாரணை
|மைசூருவில் 2 கல்லூரிகள் மாணவர்களிடையே நடந்த மோதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மைசூரு:
மைசூரு டவுன் நஜர்பாத் பகுதியில் வாணி விலாஸ் என்ற பெயரில் அரசு ஜூனியர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் ஆண்டு விழா நேற்று மதியம் நடந்தது. இதில் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கலந்துகொண்டனர். கல்லூரியின் ஆண்டு விழாவை பார்க்க வேறு கல்லூரியை சேர்ந்த மாணவர்களும் வந்துள்ளனர். இந்த விழா முடிந்து கல்லூரி மாணவர்கள் வீட்டிற்கு செல்ல வெளியே வந்துள்ளனர். அப்போது கல்லூரி முன்பு சாலையில் 2 கல்லூரிகளை சேர்ந்த சில மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றி கைகலப்பாகியுள்ளது. அப்போது அவர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
நடுரோட்டில் நின்று சண்டை போட்டதால் பொதுமக்கள் கூடி அவர்களை விலக்கிவிட முயன்றனர். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த நஜர்பாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களின் சண்டையை விலக்கிவிட்டனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து மாணவர்கள் என்பதால் வழக்குப்பதிவு செய்யாமல் புத்திமதி கூறி அனுப்பி வைத்தனர். ஒரு மாணவியுடன் காதல் விவகாரத்தில் 2 கல்லூரி மாணவர்களும் மோதி கொண்டதாக கூறப்படுகிறது.