கோலாரில் பரபரப்பு: கே.எச்.முனியப்பா-ரமேஷ்குமார் ஆதரவாளர்கள் இடையே மோதல்
|கோலாரில், காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக்கூட்டத்தின்போது கே.எச்.முனியப்பா-ரமேஷ்குமார் ஆதரவாளர்கள் இடையே மோதல் உண்டாகி கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது.
கோலார் தங்கயவல்:
காங்கிரஸ் கட்சி கூட்டம்
எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவின் 75-வது பிறந்தநாள் விழா, ஆகஸ்டு 3-ந் தேதி காங்கிரஸ கட்சி சார்பில் தாவணகெரேயில் பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. இவரது பிறந்த நாள் விழாவை கொண்டாடுவது தொடர்பாக நேற்று கோலார் நகரில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.பி. கே.எச்.முனியப்பா மற்றும் முன்னாள் சபாநாயகரும், எம்.எல்.ஏ.வுமான ரமேஷ்குமார் கலந்துகொண்டனர். மேலும் காங்கிரஸ் தொண்டர்கள், அவர்களது ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.
மோதல்
இந்த கூட்டத்தில் சித்தராமையாவின் பிறந்தநாள் விழா கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது திடீரென கே.எச்.முனியப்பா, ரமேஷ்குமார் ஆதரவாளர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் ஒருவரையொருவர் தாக்கியுள்ளனர்.
பரபரப்பு
இந்த மோதல் சம்பவத்தை நிருபர்கள் புகைப்படம், வீடியோ எடுத்துள்ளனர். அதைப்பார்த்த ரமேஷ்குமார் எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஆதரவாளர்கள் நிருபர்களை தரக்குறைவாக பேசியதுடன் புகைப்படம் எடுக்கக்கூடாது என்று கூறி
நிருபர்களின் செல்போன்களை பறித்துக்கொண்டதாக தெரிகிறது. இதில் ரமேஷ்குமாரின் ஆதரவாளர்கள் நிருபர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இருதரப்பினரையும் விலக்கிவிட்டு சமாதானப்படுத்தினர். பின்னர் மோதலில் ஈடுபட்டவர்களை கட்சி அலுவலகத்தில் இருந்து வெளியேற்றினார்கள். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.