சித்ரதுர்கா: தந்தை வீசிய கத்தி பாய்ந்து சிறுவன் சாவு
|டி.வி. சேனல் மாற்றுவதில் சகோதரர்கள் இடையே தகராறு ஏற்பட்டதால் கோபத்தில் தந்தை வீசிய கத்தி பாய்ந்து சிறுவன் உயிரிழந்தான்.
சிக்கமகளூரு-
டி.வி. சேனல் மாற்றுவதில் சகோதரர்கள் இடையே தகராறு ஏற்பட்டதால் கோபத்தில் தந்தை வீசிய கத்தி பாய்ந்து சிறுவன் உயிரிழந்தான்.
தொழிலாளி
சித்ரதுர்கா மாவட்டம் முலகாலமூரு தாலுகா என்.எஸ். படாவனே பகுதியை சேர்ந்தவர் லட்சுேமஷா. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் சந்திரசேகர் (வயது16), பூர்னேஷ் (14) ஆகிய 2 மகன்களும் இருந்தனர். லட்சுமேஷா அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சந்திரசேகர், பூர்னேஷ் ஆகிய 2 பேரும் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.
இந்தநிலையில், சந்திரசேகர், பூர்னேஷ் ஆகியோர் வீட்டில் இருக்கும்போது டி.வி.யில் சேனல் மாற்றுவதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நேற்று மாலை சந்திரசேகர், பூர்னேஷ் வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் 2 பேருக்கும் இடையே சேனலை மாற்றுவதில் தகராறு ஏற்பட்டது.
கத்திக்குத்து
இதில் டி.வி. ரிமோட்டை சந்திரசேகர் வைத்து கொண்டு பூர்னேசுக்கு கொடுக்க மறுத்தார். இவர்களின் சத்தம் கேட்ட லட்சுமேஷா அவர்கள் 2 பேரையும் கண்டித்து விட்டு தனது அறைக்குள் சென்றார். ஆனால் அவர்கள் 2 பேரும் சமாதானம் ஆகி கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த லட்சுமேஷா அருகில் கிடந்த கத்தியை எடுத்து சந்திரசேகர் மீது வீசினார்.
இதில் சந்திரசேகரின் காதில் கத்தி குத்தியதில் அவர் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து லட்சுமேஷா அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் சந்திரசேகரை மீட்டு சிகிச்சைக்காக சித்ரதுர்கா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரசேகர் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து முலகாலமூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமேஷாவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.