உணவு உற்பத்தியில் பெண் விவசாயிகளின் பங்கு முக்கியமானது; மந்திரி செலுவராயசாமி பேட்டி
|உணவு உற்பத்தியில் பெண் விவசாயிகளின் பங்கு முக்கியமானது என்று விவசாயத்துறை மந்திரி செலுவராயசாமி கூறினார்.
பெங்களூரு:
உணவு உற்பத்தியில் பெண் விவசாயிகளின் பங்கு முக்கியமானது என்று விவசாயத்துறை மந்திரி செலுவராயசாமி கூறினார்.
சுகாதாரமான உணவு
விவசாய தொழில்நுட்பத்துறை சார்பில் உலக உணவு தினவிழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் விவசாயத்துறை மந்திரி செலுவராயசாமி கலந்து கொண்டு, விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-
உணவு நமது அத்தியாவசிய தேவைகளில் ஒன்று. அனைத்து உயிரினங்களுக்கும் முதல் தேவை உணவு தான். கால மாற்றத்தால் நமது உணவு முறையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நமது முன்னோர்கள் சுகாதாரமான உணவு முறைகளை பின்பற்றினர். அதனால் அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள் பெற்று வாழ்ந்தனர். அதன் பிறகு உணவு முறை மாறியது. ஆனால் மக்கள் தற்போது பழமையான உணவு முறைகளை தேடுகிறார்கள்.
பெண் விவசாயிகளின் பங்கு
அதனால் சிறுதானியங்களுக்கு தேவை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுதானியம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. வரும் நாட்களில் விவசாய விளை பொருட்களுக்கு அதிக விலை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
விளைபொருட்களுக்கு 'பிராண்டிங்' ஏற்படுத்தவும் அரசு உதவும். விவசாய உற்பத்தி சங்கங்கள் பலப்படுத்தப்படுகிறது. விவசாய புத்தொழில் நிறுவனங்களுக்கும் ஊக்கம் அளிக்கப்படுகிறது. இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உணவு உறபத்தியில் பெண் விவசாயிகளின் பங்கு முக்கியமானது. வறட்சி போன்றவற்றால் இளைஞர்கள் வேலை தேடி நகரங்களை நோக்கி செல்கிறார்கள்.
உணவு தானியங்கள்
ஆனால் 70 சதவீத பெண் விவசாயிகள் கிராமங்களில் இருந்து விவசாயம் செய்கிறார்கள். முன்பு இந்தியா உணவுக்காக கஷ்டப்பட்டது. ஆனால் இன்று உணவு தானியங்களை ஏற்றுமதி செய்வதில் இந்தியா முக்கிய இடம் வகிக்கிறது. விவசாயிகள் என்றால் அதில் பெண் விவசாயிகளும் சேருகிறார்கள். பெண் விவசாயிகளை பொருளாதார ரீதியாக பலப்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு செலுவராயசாமி பேசினார்.