< Back
பெங்களூரு
சி.பி.ஐ. விசாரணை, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை -  டி.கே.சிவக்குமார் பேட்டி
பெங்களூரு

சி.பி.ஐ. விசாரணை, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை - டி.கே.சிவக்குமார் பேட்டி

தினத்தந்தி
|
21 Oct 2023 12:15 AM IST

என்மீதான சி.பி.ஐ. விசாரணை, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு -

என்மீதான சி.பி.ஐ. விசாரணை, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு குமரகிருபா விருந்தினர் மாளிகையில் நேற்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை

என் மீது கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை கடந்த பா.ஜனதா ஆட்சியில் சி.பி.ஐ. விசாரணைக்கு கொடுக்க முடியாது என்று அட்வகேட் ஜெனரல், முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பாவிடம் கூறினார். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக என் மீதான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க எடியூரப்பா அனுமதி வழங்கினார்.

இதற்காக சபாநாயகரை நேரடியாக சந்தித்து பேசி, அவர் மூலமாகவே என் மீதான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கடந்த பா.ஜனதா ஆட்சியில் உத்தரவிடப்பட்டு இருந்தது.

என் மீதான வழக்கில் 90 சதவீத விசாரணையை முடித்து விட்டதாக சி.பி.ஐ. அதிகாரிகள் கோர்ட்டில் தெரிவித்துள்ளனர். இதுவரை என்னிடம் ஒரு முறை கூட சி.பி.ஐ. விசாரணை நடத்தவில்லை. அப்படி இருக்கும் போது எப்படி 90 சதவீத விசாரணையை முடித்தார்கள் என்று தெரியவில்லை.

சி.பி.ஐ. அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் என்பதை பார்க்கலாம். என் மீதான வழக்கை விசாரிக்க சி.பி.ஐ.க்கு கோர்ட்டு அனுமதி வழங்கி இருப்பது குறித்து வக்கீல்களுடன் ஆலோசித்துள்ளேன்.

அதிக பலத்துடன் இருக்கிறாரோ...

என்னை பற்றி தெருவில் செல்பவர்கள் பேசுவதற்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை. கர்நாடக ஐகோர்ட்டு என்ன சொல்லி இருக்கிறதோ, அதற்கு தலை வணங்கி நடந்து கொள்வேன். பொதுவாக அரசியலில் பிரபலமானவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது அதிகம். யார் ஒருவர் அதிக பலத்துடன் இருக்கிறாரோ, அவருக்கு அதிகமான எதிரிகளும் இருப்பார்கள். இது சகஜமானது.

என்மீது மட்டும் வழக்கு இல்லை. பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் மந்திரிகள் மீதும் கடந்த ஆட்சியில் கூட வழக்குகள் இருந்தது. அந்த வழக்குகளை எல்லாம் சி.பி.ஐ. விசாரணைக்கு எதற்காக கொடுக்கவில்லை. என் மீதான சி.பி.ஐ. விசாரணை ஒரு பழிவாங்கும் அரசியல் செயல் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்