< Back
பெங்களூரு
மண்டியாவில் காவிரி போராட்ட குழுவினர் மோட்டார் சைக்கிள் பேரணி
பெங்களூரு

மண்டியாவில் காவிரி போராட்ட குழுவினர் மோட்டார் சைக்கிள் பேரணி

தினத்தந்தி
|
17 Oct 2023 3:03 AM IST

தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து மண்டியாவில் காவிரி போராட்ட குழுவினர் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினர்.

மண்டியா:

தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து மண்டியாவில் காவிரி போராட்ட குழுவினர் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினர்.

தண்ணீர் திறப்பு

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் அணைகள் முழுமையாக நிரம்பவில்லை. இதனால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி கர்நாடக அரசு தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட்டு வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் தொடர்ந்து தீவிர போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் எதிர்க்கட்சிகளும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வருகின்றன.

42-வது நாளாக...

இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு காவிரியில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. இது விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் மண்டியாவில் விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. மண்டியா டவுன் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே சர் எம்.விசுவேஸ்வரய்யா பூங்காவில் காவிரி நீர் பாதுகாப்பு குழுவினர் கடந்த 41 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் 42-வது நாளாக நேற்றும் போராட்டம் நடந்தது. அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

மோட்டார் சைக்கிள் பேரணி

இந்த நிலையில், காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து நேற்று மண்டியாவில் காவிரி போராட்ட குழுவினர் சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது. அவர்கள் சர் எம்.விசுவேஸ்வரய்யா பூங்காவில் இருந்து மோட்டார் சைக்கிள் பேரணியை தொடங்கினார். பின்னர் நகரின் முக்கிய சாலைகளில் பேரணியாக வந்தனர். அப்போது அவர்கள், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதையடுத்து மீண்டும் விசுவேஸ்வரய்யா பூங்காவுக்கு வந்த அவர்கள் கூறுகையில், தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை நிறுத்த கோரி தொடர் போராட்டம் நடத்தினாலும், அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. விவசாயிகள் மீது அரசு அலட்சியம் காட்டாமல், தண்ணீர் திறப்பை நிறுத்தி விவசாயிகளின் நலனை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தலையிடாமல் உள்ளது. இரு மாநிலங்கள் இடையே மோதல் சூழல் நிலவும்போது, அதற்கு தீர்வு காண வேண்டியது மத்திய அரசின் கடமை. ஆனால் அதனை மறந்து மத்திய அரசு செயல்படுகிறது.

தசரா கொண்டாட்டத்தால் விவசாயிகளை மாநில அரசு மறந்தது என்றால், மத்திய அரசு மவுனம் சாதித்து வருகிறது. வரும் நாட்களில் காவிரி போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்