லஞ்சம் வாங்கிய: ராஜாஜிநகர் இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீஸ் அதிகாரிகள் கைது
|குற்றம்சாட்டப்பட்டவருக்கு ‘பி’ அறிக்கை வழங்க லஞ்சம் வாங்கிய ராஜாஜிநகர் இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீஸ் அதிகாரிகளை லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு:-
குற்றம்சாட்டப்பட்டவருக்கு 'பி' அறிக்கை வழங்க லஞ்சம் வாங்கிய ராஜாஜிநகர் இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீஸ் அதிகாரிகளை லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர்.
ரூ.5 லட்சம் லஞ்சம்
பெங்களூரு ராஜாஜிநகர் போலீஸ் நிலையத்தில் லட்சுமண் கவுடா என்பவர் இன்ஸ்பெக்டராக உள்ளார். சப்-இன்ஸ்பெக்டராக மாருதி என்பவர் பணி செய்து வருகிறார். இந்த நிலையில் ராஜாஜிநகரை சேர்ந்த ஸ்ரீசாகர் என்பவர் மீது குற்றச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வழக்கில் தனக்கு ஆதரவாக 'பி' அறிக்கை (குற்றமற்றவர் என கூறும் அறிக்கை) வழங்குமாறு கூறினார். இதற்காக அவர் இன்ஸ்பெக்டர் லட்சுமண் கவுடாவை சந்தித்து பேசினர். அப்போது குற்ற வழக்கில் ஆதரவாக 'பி' அறிக்கை வழங்க ரூ.5 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
3 பேர் கைது
இதுகுறித்து ஸ்ரீசாகர், லோக் அயுக்தா போலீசில் புகார் அளித்தார். உடனே போலீசார் அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். அதன்படி ஸ்ரீசாகர், இன்ஸ்பெக்டர் லட்சுமண் கவுடாவை சந்தித்து ரூ.50 ஆயிரம் லஞ்சப்பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லோக் அயுக்தா போலீசார் இன்ஸ்பெக்டர் லட்சுமண் கவுடாவை கையும், களவுமாக கைது செய்தனர்.
மேலும் லஞ்சம் பெற்ற வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் மாருதி மற்றும் போலீஸ் ஏட்டு ஆஞ்சநேயா ஆகியோரையும் லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக 3 பேரிடமும் லோக் அயுக்தா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.