உலக கோப்பை கிரிக்கெட் போட்டி எதிரொலி: சின்னசாமி மைதானத்துக்கு கூடுதல் பஸ்கள் இயக்கம்
|உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியையொட்டி சின்னசாமி மைதானத்துக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு:
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதேபோல், கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் 5 போட்டிகள் நடக்க உள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா இடையிலான போட்டி நடக்க உள்ளது. இந்த நிலையில் கிரிக்ெகட் போட்டியையொட்டி ரசிகர்களின் வசதிக்காக பெங்களூருவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சின்னசாமி கிரிக்ெகட் மைதானத்துக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் (பி.எம்.டிசி.) தெரிவித்துள்ளது.
அதாவது போட்டி நடக்கும் இன்று, வருகிற 26-ந்தேதி, அடுத்த மாதம் 4 மற்றும் 9-ந்தேதிகளில் பெங்களூரு சின்னசாமி கிரிக்ெகட் மைதானத்தில் இருந்து காடுகோடி, சர்ஜாப்புரா, எலெக்ட்ரானிக் சிட்டி, பன்னரகட்டா, கெங்கேரி, ஜனபிரியா, நெலமங்களா, பாகலூர், ஒசக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது.