< Back
பெங்களூரு
பா.ஜனதாவுக்கு யாரும் பாடம் எடுக்க தேவை இல்லை; மந்திரி அரக ஞானேந்திரா பேட்டி
பெங்களூரு

பா.ஜனதாவுக்கு யாரும் பாடம் எடுக்க தேவை இல்லை; மந்திரி அரக ஞானேந்திரா பேட்டி

தினத்தந்தி
|
12 Aug 2022 3:34 PM GMT

தேசபக்தி குறித்து பா.ஜனதாவுக்கு யாரும் பாடம் எடுக்க தேவை இல்லை என்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா கூறியுள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நாடு பெரியது

கர்நாடக ஊழல் தடுப்பு படையை ஐகோர்ட்டு ரத்து செய்து லோக்அயுக்தாவுக்கு அதிகாரம் அளித்துள்ளது. இதை நான் வரவேற்கிறேன். லோக்அயுக்தாவை எங்கள் அரசு எதிர்க்கவில்லை. சித்தராமையா தான் என்ன பேசினாலும் நடக்கும் என்று கருதி பேசுகிறார். அவர் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றாரா?. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. அவருக்கு வயது 75. அதனால் அவரிடம் இருந்து நாங்கள் பாடம் கற்க தேவை இல்லை.

ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதாவுக்கு தேசபக்தி குறித்து யாரும் பாடம் எடுக்க தேவை இல்லை. நான் சிறு வயது முதலே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தேசபக்தி குறித்து பாடம் கற்றுள்ளேன். நாடு சுதந்திர தின பவள விழாவை கொண்டாடுவதால் ஹர் கர் திரங்கா இயக்கத்தை நடத்துகிறோம். அரசியல் காரணங்களை விட நாடு பெரியது என்ற உணர்வு இதன் மூலம் ஏற்படுகிறது.

பிரவீன் நெட்டார்

சுதந்திரத்திற்காக உயிர்த்தியாகம் செய்தவர்களை நாம் நினைவு கூற வேண்டும். மங்களூருவில் பிரவீன் நெட்டார் கொலை குறித்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் இங்கு வந்துள்ளனர். அந்த கொலை தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அடிக்கடி இருப்பிடங்களை மாற்றிய அவர்களை போலீசார் தீவிரமாக செயல்பட்டு கைது செய்வதில் வெற்றி பெற்றுள்ளனர்.

இவ்வாறு அரக ஞானேந்திரா கூறினார்.

மேலும் செய்திகள்