கன்னட 'பிக்பாஸ்' போட்டியாளர் அதிரடி கைது - பரபரப்பு
|புலி பல்லுடன் கூடிய சங்கிலி அணிந்திருந்ததால் கைதான பிக்பாஸ் போட்டியாளர் சிறையில் அடைக்கப்பட்டார்.
பெங்களூரு:
புலி பல்லுடன் கூடிய சங்கிலி அணிந்திருந்ததால் கைதான பிக்பாஸ் போட்டியாளர் சிறையில் அடைக்கப்பட்டார்.
பிக்பாஸ் போட்டியாளர்
கர்நாடகத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி சார்பில் 'பிக்பாஸ்' எனப்படும் ரியாலிட்டி ஷோ நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 10-வது சீசன் கடந்த 8-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர் அருகே பிக்பாஸ் வீடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சந்தோஷ் என்ற வர்த்தூர் சந்தோஷ் என்பவர் போட்டியாளராக இருந்து வந்தார்.
விவசாயியான சந்தோஷ், எருது விடும் போட்டிகளில் பங்கேற்பது, அதிகமான தங்க நகைகளை அணிவதன் மூலமாக பிரபலமாகி இருந்தார். இந்த நிலையில், சந்தோஷ் தனது கழுத்தில் புலி பல்லுடன் கூடிய சங்கிலியை அணிந்திருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ஒரு நபர் தகவல் தெரிவித்து இருந்தார். அதனை புகாராக பெற்றுக் கொண்ட வனத்துறையினர் விசாரணையை தொடங்கினார்கள்.
புலி பல் டாலர்
பின்னர் கடந்த 22-ந் தேதி நள்ளிரவில் ராஜராஜேஸ்வரிநகரில் உள்ள பிக்பாஸ் வீட்டுக்கு வனத்துறையினர் சென்றனர். நிகழ்ச்சி நடத்துபவர்களிடம் சந்தோசிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று அதிகாரிகள் கூறினார்கள். இதையடுத்து, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த சந்தோசை அதிகாரிகள் பிடித்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அவர், அணிந்திருந்த டாலரை வாங்கி பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது தங்கத்தால் அந்த டாலரை சந்தோஷ் வடிவமைத்து, அதற்குள் புலி பற்களை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது புலி பற்கள் தான் என்பதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம் பிக்பாஸ் போட்டியாளர் சந்தோஷ் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து தங்க நகையுடன் கூடிய புலி பற்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் அந்த புலி பற்கள் எப்படி கிடைத்தது?; யார் அதனை கொடுத்தார்கள்? உள்ளிட்டவை குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.
சிறையில் அடைப்பு
வனத்துறையின் சட்ட விதிமுறைகளின்படி புலி பற்களை விற்பனை செய்யவோ, வாங்குவதற்கோ அனுமதி கிடையாது. இதன் காரணமாக சந்தோசை கைது செய்திருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கைதான சந்தோஷ் மீது வனத்துறையினர் வழக்கும் பதிவு செய்துள்ளனர். பின்னர் அவர், பெங்களூரு கோர்ட்டில் நீதிபதி முன்னிலையில் சந்தோஷ் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, பரப்பனஅக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். அறை எண் 3-ல் அடைக்கப்பட்ட சந்தோசுக்கு, 10,935 கைதி எண் வழங்கப்பட்டுள்ளது. சந்தோஷ் கொடுத்த புலி பற்களை ஒரு நகை வியாபாரி தான் டாலர் போல செய்து கொடுத்திருந்தார். இதையடுத்து, அந்த நகை வியாபாரியை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி உள்ளனர். பிக்பாஸ் போட்டியில் பங்கேற்ற போட்டியாளர் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் தர்ஷன், தயாரிப்பாளரிடம் புலி பற்கள் உள்ளதா?
பிக்பாஸ் போட்டியாளர் சந்தோஷ் புலி பற்களுடன் கூடிய தங்க நகையை அணிந்திருந்ததால் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் தர்ஷன் மற்றும் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேசும் தங்களது கழுத்தில் புலி பற்கள் இருப்பது போன்ற டாலர்களை அணிந்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால் அவர்களிடமும் புலி பற்கள் உள்ளதா? என்று சமூக வலைதளங்களில் விவாதம் நடக்கிறது.