< Back
பெங்களூரு
பெங்களூருவில், கனமழையால் பாதிக்கப்பட்ட  2 லே-அவுட்டுகளில் வெள்ளம் முற்றிலும் வடிந்தது
பெங்களூரு

பெங்களூருவில், கனமழையால் பாதிக்கப்பட்ட 2 லே-அவுட்டுகளில் வெள்ளம் முற்றிலும் வடிந்தது

தினத்தந்தி
|
12 Sept 2022 10:32 PM IST

பெங்களூருவில் கனமழையால் பாதிக்கப்பட்ட 2 லே-அவுட்டுகளில் வெள்ளம் முற்றிலுமாக வடிந்துள்ளது. அங்குள்ள வீடுகளை சுத்தப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

பெங்களூரு:

லே-அவுட்டுகளை சூழ்ந்த வெள்ளம்

பெங்களூருவில் கடந்த வாரம் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் ஏரிகள் நிரம்பி உடைந்து போனதால் சர்ஜாப்புரா ரோட்டில் உள்ள ரெயின்போ லே-அவுட், சன்னிபுருக்ஸ் லே-அவுட்டுகளை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் அந்த லே-அவுட்டுகளில் உள்ள ஆடம்பர வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் வீடுகளில் இருந்த பொருட்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன.

வீடுகள் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த விலை உயர்ந்த கார்களும் தண்ணீரில் மூழ்கின. இதையடுத்து 2 லே-அவுட்டுகளிலும் உள்ள வீடுகளில் சிக்கியவர்கள் ரப்பர் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்கள் ஓட்டல்கள், நண்பர் மற்றும் உறவினர்கள் வீடுகள் தங்கி இருந்தனர். மேலும் லே-அவுட்டுகளை சூழ்ந்த வெள்ளத்தை மின்மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணியும் நடந்து வந்தது.

சுத்தம் செய்யும் பணி

இந்த நிலையில் ரெயின்போ, சன்னிபுருக்ஸ் லே-அவுட்டுகளை சூழ்ந்த வெள்ளம் முற்றிலுமாக வடிந்து உள்ளது. இதனால் லே-அவுட்டுகளில் உள்ள வீடுகளில் வசித்த மக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பி வர தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் மழையால் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கும் வீடுகளை சுத்தப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் வீடுகளில் உள்ள பொருட்களையும் சுத்தப்படுத்தி வருகிறார்கள். வீடுகளுக்கு திரும்பி வந்தவர்கள் தங்களது வீட்டின் நிலையை கண்டு கண்ணீர் வடித்தனர். பின்னர் மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடன் வீட்டில் உள்ள பொருட்களை வீட்டின் உரிமையாளர்களும் சுத்தம் செய்து வருகிறார்கள்.

இயல்புநிலை திரும்புகிறது

சேதம் அடைந்த கார்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவை பழுது நீக்கவும் எடுத்து செல்லப்பட்டு உள்ளன. சுத்தம் செய்யப்பட்டு உள்ள வீடுகளில் மாநகராட்சி ஊழியர்கள் மருந்தும் தெளித்து

வருகின்றனர். இதற்கிடையே ரெயின்போ லே-அவுட் நுழைவு வாயில் பகுதியில் உள்ள ஒரு வங்கி, ஏ.டி.எம். மையத்திற்குள் வெள்ளம் புகுந்து இருந்தது.

வங்கியில் வெள்ளம் புகுந்ததால் முக்கிய ஆவணங்கள் தண்ணீரில் நனைந்து சேதம் அடைந்தன. அந்த ஆவணங்களை தற்போது உலர வைக்கப்பட்டு உள்ளன. மேலும் வங்கியில் இருந்த நாற்காலிகள் வெளியே எடுக்கப்பட்டு வெயிலில் உலர வைக்கப்பட்டு உள்ளன. ஏ.டி.எம்.மையத்தையும் சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது. 2 லே-அவுட்டுகளில் வெள்ளம் வடிந்ததால் அங்கு இயல்புநிலை மெல்ல, மெல்ல திரும்பி வருகிறது.

மாநகராட்சி அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

ரெயின்போ லே-அவுட்டில் வசித்து வரும் மக்கள் கூறுகையில், எங்கள் லே-அவுட்டில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. இதற்கு ராஜகால்வாய்களை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியதே காரணம் என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறி வருகின்றனர். ஆனால் அதில் உண்மை இல்லை. கடந்த 2017-ம் ஆண்டு பெங்களூருவில் கனமழை பெய்தது. அப்போது எங்கள் குடியிருப்பில் தண்ணீர் தேங்கவில்லை. அந்த மழையை காட்டிலும் தற்போது பெய்த மழை குறைவு தான். லே-அவுட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள ஏரியை கடந்த 40 ஆண்டுகளாக தூர்வாரவில்லை. சரியாக பராமரிக்காத காரணத்தால் அந்த ஏரியின் தண்ணீர் லே-அவுட்டில் புகுந்தது. எங்களின் இந்த நிலைக்கு மாநகராட்சி அதிகாரிகள் தான் காரணம் என்றனர்.

மேலும் செய்திகள்