பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கூடிய விரைவில் கெம்பேகவுடா சிலை திறக்கப்படும்
|பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கூடிய விரைவில் கெம்பேகவுடா சிலை திறக்கப்படும் பசவராஜ் பொம்மை பேட்டி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளி தாலுகாவில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. விமான நிலையத்தில் முன் பகுதியில் 108 அடி உயரம் கொண்ட கெம்பேகவுடாவின் வெண்கல சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு விமான நிலையத்திற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சென்றார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டு வரும் கெம்பேகவுடா உருவ சிலையை அவர் பார்வையிட்டார். சிலை அமைப்பது, பூங்கா அமைப்பது உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்கும்படியும், சிலை சிறப்பாக இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். பின்னர் பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியாவது:-
பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கெம்பேகவுடாவுக்கு 108 அடி உயரம் கொண்ட பிரமாண்ட வெண்கல சிலை அமைக்கப்படுகிறது. இதற்காக 220 டன் வெண்கலம் பயன்படுத்தப்படுகிறது. சர்வதேச விமான நிலையத்தில் 2-வது டெர்மினல் அமைக்கும் பணிகளும் முடிந்துள்ளது. கெம்பேகவுடா சிலை அமைக்கும் பணிகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் கூடிய விரைவில் கெம்பேகவுடா சிலை திறக்கப்படும். அதனுடன் சேர்த்து சர்வதேச விமான நிலையத்தின் 2-வது டெர்மினலும் பயன்பாட்டுக்கு வரும். கெம்பேகவுடா சிலையை பார்க்க பிரம்மிப்பாக உள்ளது. சிலையை சுற்றி அழகான பூங்காவும் அமைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மந்திரி அஸ்வத் நாராயண் உடன் இருந்தார்.