பண்ட்வால்; தொழில் அதிபர் வீட்டில் ரூ. 32 லட்சம் நகை, பணம் திருட்டு
|பண்ட்வால் அருகே தொழில் அதிபர் வீட்டில் ரூ. 32 லட்சம் மதிப்பிலான நகை, பணம் திருட்டு சம்பவம் நடந்துள்ளது.
மங்களூரு-
பண்ட்வால் அருகே தொழில் அதிபர் வீட்டில் ரூ. 32 லட்சம் மதிப்பிலான நகை, பணம் திருட்டு சம்பவம் நடந்துள்ளது.
தொழில் அதிபர்
தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா பரங்கிப்பேட்டை அருகே உள்ள கொடிமஜலு கிராமத்தை சேர்ந்தவர் முகமது ஜபருல்லா. தொழில் அதிபர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன்கள் உள்ளனர். முகமது வீட்டில் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் மஞ்சேஷ்வர் பகுதியை சேர்ந்த ஆலி என்பவர் வேலை பார்த்து வந்தார்.
முகமது தொழில் சம்பந்தமாக அடிக்கடி வெளியூர் செல்வது வழக்கம். அதன்படி அவர் கடந்த 19-ந்தேதி மங்களூருவில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து சொந்த வேலை காரணமாக முகமது பெங்களூருவுக்கு சென்றார். அங்கு வேலைகளை முடித்து கொண்டு நேற்று முன்தினம் இரவு காரில் முகமது வீடு திரும்பினார்.
பின்னர் தனது அறைக்கு அவர் சென்றார். அப்போது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. இதனை பார்த்த அவர் இதுகுறித்து வீட்டில் இருந்தவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள் தெரியாது என கூறினர்.
ரூ. 32 லட்சம் நகை
இதனால் பதறிபோன முகமது பீரோவை சோதனை செய்தார். அப்போது, அப்போது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த ரூ. 32 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், ரொக்கப்பணம் ஆகியவற்றை காணவில்லை. இதுகுறித்து பண்ட்வால் புறநகர் போலீசுக்கு முகமது தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள், மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது.
விசாரணையில், முகமது வீட்டில் வேலை பார்த்த ஆலியை காணவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டனர். அப்போது அவரது எண் சுவிட்ச்- ஆப் என வந்தது. இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து, ஆலி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், அவரை பண்ட்வால் புறநகர் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.